சித்திரை திருவிழா: வைகை அணையில் நீர் இருப்பு

ஆண்டிபட்டி: வைகை அணைக்கு முல்லை பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர் வரத்து கிடைக்கும். கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு, வடகிழக்கு பருவமழையால் வைகை அணை நீர்மட்டம் 65 அடி வரை உயர்ந்தது.

அணைக்கான நீர்வரத்தும் ஜூலை முதல் டிசம்பர் வரை கணிசமாக தொடர்ந்தது. அணையில் இருப்பில் இருந்த நீர் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீருக்கு தொடர்ந்து பயன்படுத்தப்பட்டதால் படிப்படியாக குறைந்த அணை நீர்மட்டத்தை, நீர்வரத்து சமன் செய்து வந்தது. நேற்று அணை நீர்மட்டம் 56.69 அடியாக இருந்தது.

அணை உயரம் 71 அடி. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 504 கன அடியாக இருந்தது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி -- சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கோடையின் தாக்கம் இன்னும் இரு மாதங்கள் வரை நீடிக்கும் வாய்ப்புள்ளது. மே 12ல் மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு தண்ணீர் தேவைப்படும்.

நீர்வளத் துறையினர் கூறியதாவது: அணையில் தற்போது 2.4 டி.எம்.சி., அளவு நீர் இருப்பு உள்ளது. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் இரு போக பாசனத்திற்கான நீர் திறப்புக்காலம் முடியும் தருவாயில் உள்ளது. மதுரை சித்திரைத் திருவிழாவிற்கு தண்ணீர் திறக்கவும், கோடையின் குடிநீர் தேவைக்கும் தற்போதுள்ள நீர் இருப்பு போதுமானது என்றனர்.

Advertisement