திருப்பூரில் சூறைக்காற்றுடன் மழை: 2 பேர் பலி; 109 மின் கம்பம் சேதம்

திருப்பூர்: திருப்பூரில் நேற்று முன்தினம் பல இடங்களில் சூறைக்காற்றுடன், மழை பெய்தது; இதில், 109 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக, மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி, பல்லடம், மங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் நேற்று முன்தினம் இரவு, சூறைக் காற்று வீசியது; பல்வேறு இடங்களில் பலத்த மழையும் பெய்தது. சாலையோரம் மரங்கள் ஏராளமானவை சாய்ந்தன. மரக்கிளைகள் மின் கம்பிகளின் மீதும், மின் கம்பங்களின் மீதும் சாய்ந்தன. பல மின்கம்பங்கள் முறிந்துவிழுந்தன.

''சூறைக் காற்றுக்கு, 35 உயரழுத்த மின் கம்பம்; 74 குறைந்த அழுத்த மின்கம்பம் என, 109 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன'' என, மின் வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

இருவர் பலி



பலத்த காற்று மற்றும் மழை காரணமாக, திருமுருகன்பூண்டியில் ஹாலோபிளாக்கால் கட்டப்பட்டிருந்த வீட்டில் சுவர் இடிந்து கட்டடத் தொழிலாளி ராஜூ, 28 என்பவர் பலியானார்.

பல்லடம், அருள்புரம் பாச்சாங்காட்டுப்பாளையத்தில் உள்ள டையிங் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தவர், மதுரை, பாத்திமா நகரை சேர்ந்த வினோத்குமார், 40. சூறைக்காற்றுடன் மழை பெய்தபோது வினோத்குமார், அங்குள்ள குட்டை வழியாக நடந்துவந்தார். மின் கம்பி அறுந்தது தெரியாமல் காலில் மிதித்தார். அதே இடத்தில் மின்சாரம் தாக்கி பலியானார்.

Advertisement