மீண்டும் மீண்டும் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட மதரசா ஆசிரியர்: 187 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பு

18

கண்ணூர்: கோவிட்-19 பெருந்தொற்று ஊரடங்கின் போது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஒரு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக மதரசா ஆசிரியருக்கு 187 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.


கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் அலக்கோடு பஞ்சாயத்தில் உள்ள உதயகிரியைச் சேர்ந்தவர் முகமது ரபி, 41. இவர் மதரசா ஆசிரியராக இருந்து வந்தார்.

மார்ச் 2020ம் ஆண்டு, கோவிட்-19 தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, ​​ 14 வயது சிறுமிக்கு இரண்டு ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி வேறு யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டல் விடுத்துள்ளார்.

சிறுமியின் மதிப்பெண்கள் குறைந்து வருவதையும், உடல் ரீதியாக ஏற்படும் மாற்றங்களையும் கண்டு கவலைப்பட்ட அவரது பெற்றோர், கண்ணூரில் உள்ள ஒரு ஆலோசனை மையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது உண்மை சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தது.

சிறுமிக்கு மதரசா ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில், நீதிபதி ஆர்.ராஜேஷ் இன்று தீர்ப்பளித்தார்.

போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் ஏழு பாலியல் குற்றங்களில் ரபி குற்றவாளி என்று நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கினார். போக்சோ சட்டம் உட்பட பல்வேறு பிரிவின் கீழ் 187 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மொத்தம் ரூ.9.10 லட்சம் அபராதம் விதித்தது நீதிமன்றம்.

இது தொடர்பாக வழக்கறிஞர் ஷெரிமோல் ஜோஸ் கூறியதாவது:
தண்டனைகள் ஒரே நேரத்தில் நீடிக்கும் என்பதால், ரபி 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிப்பார், என்றார்.

ஏற்கனவே, மதரஸாவில் மற்றொரு மைனர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக முகமது ரபி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். இந்த வழக்கில் அவர் பரோலில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement