மரபணு திருத்தத்தால் திரும்ப வந்த ஓநாய்கள்!

கற்பனை கதைகளிலும், புதைபடிவங்களிலும் மட்டுமே பார்க்க முடிந்த, ஒரு மிருகம், 'டைர் வுல்ப்' எனப்படும் ஓநாய் வகை. கடைசியாக 'கேம் ஆப் த்ரோன்ஸ்' படத்தில், கிராபிக்ஸ் மூலம் இடம்பெற்று புகழ்பெற்ற இந்த ஓநாய், 10,000 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கக் கண்டத்தில் பனி யுகத்தில், ஊளையிட்டு, வேட்டையாடித் திரிந்த பயங்கர மிருகம்.

இப்பேர்ப்பட்ட ஓநாய், திடீரென திரும்ப வந்தால் எப்படி இருக்கும்? அந்த வித்தையை செய்து காட்டியிருக்கிறது உயிரித் தொழில்நுட்ப நிறுவனமான 'கொலோசல் பயோசயின்சஸ்.'

கொலோசலின் உரிமையாளர் பென் லாம் மற்றும் ஹார்வர்ட் பல்கலை மரபணுவியலாளர் ஜார்ஜ் சர்ச் ஆகியோர் 2024ன் இறுதியில், அழிந்துபோன உயிரினங்களை 'மீண்டும் உயிர்ப்பிக்கும்' துணிச்சலான நோக்கத்திற்காக, ரோமுலஸ் மற்றும் ரெமுஸ் ஆகிய குட்டிகளை ஆய்வுக்கூடத்தில் 'பிரசவித்து' காட்டினர்.

அவை, “குரூர ஓநாய் போன்ற பண்புகளைக் கொண்ட, மரபணு திருத்தம் செய்யப்பட்ட ஓநாய்கள்” என்று இருவரும் ஒப்புக்கொண்டனர். ஆனால் டைர் வுல்ப் வகை ஓநாய்கள், உண்மையில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே, பரிணாம வளர்ச்சியின்படி, சாம்பல் நிற ஓநாய் வகையிலிருந்து விலகி வந்த வேறு இனம் என்கிறது, 2021இல் வெளிவந்த ஒரு மரபணு ஆராய்ச்சி.

சினிமாவில் பிரபலமான, ஓநாயை உருவாக்குவதற்காக, கிரிஸ்பர் (CRISPR) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பழங்கால ஓநாய் புதைபடிவங்களிலிருந்து, மரபணுக்களை எடுத்துத் திருத்தி, ஒரு ஒப்பனை ஓநாயை உருவாக்கியிருக்கிறார்கள் என்று சில விஞ்ஞானிகள் விமர்சிக்கின்றனர்.

கொலோசலின் திட்டம், அழிந்த உயிரினங்களை மீட்டெடுப்பது அல்ல, மரபணுத் தொழில்நுட்பத்தால் எதுவும் செய்ய முடியும் என்று மார்தட்டுவதுதான் என்றும் விமர்சகர்கள் சொல்கின்றனர்.

Advertisement