காற்றில் கரையும் ஹூரியத் கூட்டமைப்பு:அமித் ஷா வருகை முன்னிட்டு 3 அமைப்புகள் விலகல்

9

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியுள்ளதை முன்னிட்டு, பாகிஸ்தான் ஆதரவு ஹூரியத் அமைப்பில் இருந்து மேலும் 3 அமைப்புகள் இன்று விலகியுள்ளன.


ஜம்மு காஷ்மீரில் செயல்படும் பாகிஸ்தான் ஆதரவு கட்சிகள், அமைப்புகளின் கூடாரமாக ஹூரியத் அமைப்பு இருந்து வருகிறது. 1993ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் 26 அமைப்புகள் இடம் பெற்றிருந்தனர்.
காலப்போக்கில் இந்த அமைப்பு இரண்டாக பிளவுபட்டது. எனினும் பெரும்பாலான அமைப்பினர், பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இந்நிலையில், மத்திய அரசு பயங்கரவாதத்துக்கு எதிராக மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகள் காரணமாக, ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
கடந்தாண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், ஹூரியத் அமைப்பில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் நிர்வாகிகள் பலர் போட்டியிட்டனர். வாக்காளர்கள் பங்கேற்பும் அதிக எண்ணிக்கையில் இருந்தது.


இதன் காரணமாக, ஹூரியத் கூட்டமைப்பில் இருந்து உறுப்பினர்களாக இருக்கும் கட்சிகள் விலகத் தொடங்கியுள்ளன.இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஸ்ரீநகர் வருகைக்கு சில மணி நேரங்கள் முன்னதாக, மூன்று அமைப்பினர் ஹூரியத் கூட்டமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.


ஜம்மு காஷ்மீர் இஸ்லாமிய அரசியல் கட்சி, ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் ஜனநாயக லீக், காஷ்மீர் விடுதலை முன்னணி ஆகிய மூன்று கட்சிகளின் தலைவர்களும், தாங்கள் அந்த கூட்டமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.இதை அமித் ஷா தன் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருக்கும் மக்களுக்கு இந்திய அரசிலயமைப்பின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளதாக, அமித் ஷா தெரிவித்துள்ளார்.


இதேபோல, மார்ச் 25ல் ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம், ஜனநாயக அரசியல் இயக்கம் என்ற இரு அமைப்புகள் ஹூரியத் கூட்டமைப்பில் இருந்து விலகிக்கொண்டன.இன்று ஸ்ரீநகர் சென்ற அமித் ஷா, சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து போலீஸ், ராணுவம், துணை ராணுவப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


''எக்காரணம் கொண்டும் பயங்கரவாத செயல்பாடுகளை சகித்துக் கொள்ளக்கூடாது. ஊடுருவல் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்,'' என்று அவர், பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

Advertisement