இருளில் மூழ்கும் தேசிய நெடுஞ்சாலை  எட்டு ஆண்டாக 'துாங்கும்' அதிகாரிகள்

நெமிலிச்சேரி, சென்னை - திருத்தணி - ரேணிகுண்டா தேசிய நெடுஞ்சாலையில், நெமிலிச்சேரியில் இருந்து திருநின்றவூர் வரை, 4 கி.மீ., துாரத்திற்கு மீடியன் அமைக்கப்பட்டு எட்டு ஆண்டுகளாகியும், சாலையில் மின்விளக்கு அமைக்கப்படவில்லை. மற்ற இடங்களில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சாலை ஒட்டி, 50,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பல்வேறு தொழில் நிறுவனங்களும் உள்ளன. இருப்பினும், சாலையில் மின் விளக்கு அமைக்கப்படாததால், சாலை கும்மிருட்டாக காட்சியளிக்கிறது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம், தடுப்பு சுவரில் மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எ,ன கோரிக்கை வலுத்துள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர் கூறுகையில், 'ஐந்து ஆண்டுகள் இந்த பிரச்னையை ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்தது. தற்போது, ஊராட்சி நிர்வாகத்தை அதிகாரிகள் கவனிப்பதால், அவர்களும் கண்டுகொள்வதில்லை. எனவே, ஆவடி மாநகராட்சியில் இணைக்கும்போது தான் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்' என்றார்.

இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'சாலையில் மையத் தடுப்பு அமைப்பதோடு, எங்கள் பணி முடிந்தது. மின் விளக்கு அமைக்கும் பணியை, சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் தான் கவனிக்க வேண்டும்' என்றனர்.

Advertisement