பத்ரசாமியின் ஒரு உருக்கமான கோரிக்கை..

4



கோவை சங்கனுார் மயானத்தில் ஒரு பகல் வேளை..

உறவுகள் எல்லாம் தாங்கள் சுமந்து கொண்டு வந்திருந்த சடலத்தை இறக்கிவைத்துவிட்டு அழுதது போதும என்று நிழலில் ஒதுங்கிநின்று அடுத்த கதையை பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

ஆறாகப் பெருகி வழியும் வேர்வையை துடைத்தெறியவும் நேரமில்லாமல், சடலத்தை புதைப்பதற்காக அந்த கொடும் வெயிலிலும் கடுமையாக உழைத்து மண்ணைத்தோண்டிக் கொண்டு இருக்கிறார் மயான உதவியாளர் பத்ரசாமி.
Latest Tamil News
பத்ரசாமி தன் பணி முடித்து கொண்டு வந்த சடலத்தை நன்றாக புதைத்துவிட்டு, அதற்கான மண்ணோட பந்தத்தை உறுதி செய்துவிட்டு ஒதுங்குகிறார்.

பத்ரசாமி எப்படி இருக்கீங்க?

யார் இது? இப்படி தன் பெயரை முழுமையாக, அன்பொழுக உச்சரிப்பது என்று ஏறெடுத்துப் பார்க்கிறார்

அவர் பார்த்த இடத்தில் சமூக சேவகர் ஈரநெஞ்சம் மகேந்திரன் நின்று கொண்டு இருக்கிறார்.மயான உதவியாளர்களை மரியாதையான இடத்தில் வைத்து பார்க்க போராடுபவர்.

வெயில் ரொம்ப கஷ்டப்படுத்துதா?

இந்த கேள்விக்கு புன்னகையை பதிலாக தரும் பத்ரசாமி,அதெல்லாம் எந்த கஷ்டமுமில்லை, சக மனிதர்கள் சொல்லும் 'வெட்டியான்' என்ற சொல்தான் என்னை ரொம்பவே கஷ்டப்படுத்துகிறது என்கிறார்.

அவரே தொடர்கிறார்..

தெருவைச் சுத்தம் செய்பவர்களை துப்புரவு பணியாளர் என்று அழைக்கிறார்கள்,இதுபோல சமூகத்தில் பிற வார்த்தைகளால் அழைக்கப்பட்டவர்கள் திருநங்கை என்றும் மாற்றுத்திறனாளி என்றும் அழைக்கப்டுகிறார்கள் ஆனால் எங்களை மட்டும் வெட்டியான் என்று அழைப்பதை விடமாட்டேன் என்கின்றனர்.

கோடீசுவரனைப் புதைத்தால் கூட எங்களுக்கான கூலிப்பணத்தை, எண்ணிப்பார்த்து வீசி எறிந்துவிட்டுப் போவர் ஆனால் அது கூட வலிக்காது ஆனால் வெட்டியான் என்ற சொல்தான் என் போன்றவர்கள் மனதை அதிகம் வலிக்கச் செய்கிறது,மயான உதவியாளர் என்று அழைக்கலாம் அல்லது என் பெயரைத் தெரிந்து கொண்டு அழைக்கலாமே அதில் என்ன சிரமம் என்பது தெரியவில்லை என்ற தனது மனத்தாங்கலை வெளிப்படுத்துகிறார்.

மரணம் ஒரு நிஜம் அந்த நிஜத்திற்கு மரியாதையான முறையில் முற்றுப்புள்ளி வைப்பவர்கள் இவர்கள்.இவர்களது உழைப்பு யாருடைய உழைப்பிற்கும் குறையாதது.ஒரு உயிரின் கடைசிக்கட்டத்தை கையாண்டு மரியாதையுடன் பூமிக்குள் புனிதமாக இணைத்திடும் உன்னதமிக்க பணி இவர்களுடையது.இதை எல்லாம் யோசித்துப் பார்த்தவாது இனி பத்ரசாமியின் மனதை வலிக்கச் செய்யும் வெட்டியான் என்ற வார்த்தையை விடுத்து மயான உதவியாளர் என்ற வார்த்தையால் அழைத்து இவர் போன்றோரின் மனவலியை போக்கமுயற்சிப்போம்.

-எல்.முருகராஜ்

Advertisement