பெண்ணை போட்டோ எடுத்தவரின் சிங்கப்பூர் விமான பயணம் ரத்து

சென்னை, கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து, 'இண்டிகோ' விமானம், நேற்று நள்ளிரவு சென்னைக்கு புறப்பட்டது. இதில், 85 பேர் இருந்தனர்.

விமானத்தில் பயணித்த, கர்நாடகாவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணா, 45, என்ற நபர், பக்கத்து இருக்கையில் கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்த 29 வயது இளம்பெண்ணை, மொபைல் போனில் போட்டோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதை அப்பெண் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. விமான பணிபெண்கள் கோபால கிருஷ்ணாவின் மொபைல் போனை ஆய்வு செய்ததில், இளம்பெண் மற்றும் கைக்குழந்தையை படம் பிடித்தது தெரியவந்தது. ஆத்திரமடைந்த சக பயணியர், அவரை அடிக்க முயன்றனர். விமான பணிப்பெண்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். இது குறித்து, விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மொபைல் போனும் பறிமுதல் செய்யப்பட்டது. விமானம் நள்ளிரவு 12:00 மணிக்கு சென்னை வந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் கோபால கிருஷ்ணாவை பிடித்து, விமான நிலைய மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையின்போது, 'குழந்தை அழகாக இருந்தது; அதனால் தான் படம் பிடித்தேன். மற்றப்படி எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை' எனக் கூறினார். மேலும், தனக்கு 6:30 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்படும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இவற்றை ஏற்காத போலீசார், அவரது பயணத்தை ரத்து செய்து விசாரித்து வருகின்றனர்.

★★★

Advertisement