ஐந்தாண்டுகளாக மூடிக்கிடக்கிறது ரூ.25 லட்சத்தில் உருவான நுாலகம்

கோவை; ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட பொது நுாலகம், இன்று வரை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது; சுற்றிலும் புதர்மண்டியிருப்பதோடு, கட்டடம் வீணாகி வருகிறது.

தி.மு.க., கோவை மாநகர் மாவட்ட செயலாளராக இருப்பவர் கார்த்திக். இவர், 2016-2021 காலகட்டத்தில், சிங்காநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தார்.

2019-20 நிதியாண்டில் தொகுதி மேம்பாட்டு நிதியில், 25 லட்சம் ரூபாயில் பொது நுாலகம் கட்டுவதற்கு ஒதுக்கினார். அதில், 56வது வார்டு பி.பி.எஸ்., காலனியில் பொது நுாலகம் கட்டப்பட்டது. வர்ணம் பூசப்பட்டு தயார் நிலையில் இருந்தது.

நுாலகம் கட்டி முடித்து ஐந்தாண்டுகளாகியும், இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல், மாநகராட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

வளாகம் முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. கதவுகளுக்கு போடப்பட்ட பூட்டு துருப்பிடித்து தொங்குவதே, அக்கட்டடம் பயன்படுத்தாமல் இருப்பதற்கு சாட்சி.

தி.மு.க., ஆளுங்கட்சியாக இருக்கிறது. அக்கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ., வாக இருந்தபோது, கட்டப்பட்ட பொது நுாலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர, அரசு துறை அதிகாரிகள் அக்கறை காட்டாமல், அலட்சியமாக இருக்கின்றனர்.

இனியாவது நுாலக கட்டடத்தை, நுாலகத்துறைக்கு விரைந்து ஒப்படைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். நுாலகத்துறைக்கு தேவையில்லாத பட்சத்தில், அங்கன்வாடி மையமாக செயல்படுவதற்கு தேவையான நடவடிக்கையை, மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

Advertisement