குடிநீர் தட்டுப்பாடு கண்டித்து ஒன்றிய அலுவலகம் முற்றுகை

அன்னுார்; குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து, கிராம மக்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கஞ்சப்பள்ளி ஊராட்சியில், 4,500 பேர் வசிக்கின்றனர். கஞ்சப்பள்ளி, ஊத்துப்பாளையம், நீலகண்டன்புதுார், பனங்காட்டூர், குமரகவுண்டர்புதுார், தாசபாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனால், ஆவேசம் அடைந்த கிராம மக்கள் 50 பேர் பா.ஜ., சக்தி கேந்திர பொறுப்பாளர் பிரபாவதி தலைமையில் நேற்று மதியம் அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரனிடம், கிராம மக்கள், 'குடிநீர் மிகக் குறைவாக வருகிறது. இதனால் பல கி.மீ., துாரம் சென்று குடிநீர் எடுத்து வர வேண்டி உள்ளது. குடிநீர் தொட்டி மூடி இல்லாமல் பாதுகாப்பில்லாமல் உள்ளது. பல மாதங்களாக குடிநீர் தொட்டி துாய்மைப்படுத்தப்படவில்லை, சாலை மோசமாக உள்ளது,' என, சரமாரியாக புகார் தெரிவித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர், 'உடனடியாக கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறேன்,' என உறுதி அளித்தார்.

நேற்று மாலை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரன், கஞ்சப்பள்ளி சென்று நில மட்ட தொட்டியை ஆய்வு செய்தார். நிலமட்ட தொட்டியை முழுமையாக மூடவும், துாய்மைப்படுத்தவும், விரைவில் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்கவும் ஊராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

இதில், பா.ஜ., ஒன்றிய தலைவர் ஆனந்தன், மாவட்ட நிர்வாகிகள் தர்மலிங்கம், ராஜராஜ சாமி, ஒன்றிய பொருளாளர் அசோக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement