குனியமுத்துாரில் தொழிலாளி கொலை; கைதான நால்வரிடம் போலீஸ் விசாரணை

போத்தனூர்; கோவை, ஆத்துப்பாலம் அடுத்து சுண்ணாம்பு காளவாய், பெரியசாமி வீதியை சேர்ந்தவர் முகமது அசாருதீன், 28. மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள காய்கறி மார்க்கெட் தொழிலாளி.

நேற்று முன்தினம் இரவு, குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில், கும்பல் ஒன்று இவரை கத்தியால் குத்தி தப்பியது. படுகாயடைந்தவரை அப்பகுதியிலிருந்தோர் மீட்டு, அரக மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். தகவலறிந்த குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசார் கூறியதாவது:

கடந்த, 5ம் தேதி குனியமுத்தூர் பகுதியில், இரு பைக்குகள் மோதிக்கொண்டன. இது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. முகமது அசாருதீன் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக இருந்துள்ளார். அதன் பின் இந்த சம்பவம் தொடர்பாக, எதிர் தரப்பை சேர்ந்த சதாம், முகமது அசாருதீனை சமரசம் பேச, குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார்.

அங்கு தனது நண்பருடன், முகமது அசாருதீன் சென்றுள்ளார். அங்கு, சதாமுடன் அவரது நண்பர்கள் முகமது ரபீக், அப்பாஸ், சம்சுதீன் ஆகியோர் இருந்துள்ளனர். இரு தரப்பினருக்கும் பேச்சுவார்த்தை முற்றி, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, முகமது ரபீக் தன்னிடமிருந்த கத்தியால் முகமது அசாருதீனை குத்தியுள்ளார். இதையடுத்து நால்வரும் அங்கிருந்து தப்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி முகமது அசாருதீன் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

கொலை சம்பவத்தில் தொடர்புடைய நால்வரையும், கைது செய்துள்ள போலீசார், வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என விசாரிக்கின்றனர்.

Advertisement