வெயில் பாதிப்புக்கும் நிவாரணம் உண்டு அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
சென்னை:''வெயில் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. வெயிலில் இருந்து மக்களை காக்க, அரசு முடிந்த உதவிகளை செய்யும்,'' என, வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., - ராஜேந்திரன்: திருவள்ளூர் தொகுதி, திருத்தணி வருவாய் தாலுகாவை இரண்டாக பிரித்து, திருவாலங்காட்டில் புதிய தாலுகா உருவாக்க வேண்டும்.
அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன்: புதிய தாலுகா உருவாக்க தேவையான குறைந்தபட்ச பரப்பளவு, மக்கள் தொகை பூர்த்தியாகாததால், புதிய தாலுகா உருவாக்க சாத்தியக்கூறு இல்லை.
ராஜேந்திரன்: திருத்தணி தாலுகாவில் மூன்று பிர்காக்கள் உள்ளன. அவற்றையும் திருவள்ளூர் தாலுகாவில், கடம்பத்துார் பிர்காவில், நான்கு வருவாய் கிராமங்களையும், பாண்டூர் பிர்காவில் உள்ள வருவாய் கிராமங்களையும் இணைத்து, திருவாலங்காடு தாலுகா அமைக்க வேண்டும்.
அமைச்சர் ராமச்சந்திரன்: அரசு பரிசீலிக்கும். வருவாய் கிராமங்கள், 65 உள்ளன. திருத்தணியை பிரித்தால், 32, 33 கிராமங்கள் என வரும். எனவே, வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராஜேந்திரன்: நன்றி. கடம்பத்துார் ஒன்றியத்தில், அம்பேத்கர் நகரில், 150 ஆண்டுகளாக, ஐந்து ஏக்கரில் வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
அமைச்சர் ராமச்சந்திரன்: நீர் நிலை குட்டையாக இருப்பதால் பட்டா வழங்கப்படவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நீர் நிலை புறம்போக்கு பகுதிகளுக்கு பட்டா வழங்க முடியாது.
அ.தி.மு.க., - உதயகுமார்: தமிழகம் முழுதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அனைத்து கட்சி சார்பில், நீர், மோர் பந்தல்கள் திறக்கப்பட்டுள்ளன. உழைக்கிற தொழிலாளர்கள், மாணவர்கள், பொதுமக்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் ராமச்சந்திரன். இதுவரை பேரிடர் என்றால், மழை, புயல், வெள்ளத்தை அறிவித்திருந்தோம். தற்போது, வெயிலும் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு அரசு நிவாரணம் வழங்கும். வெயில் வரும் நேரத்தில், நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளும் சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கான யுக்திகளை அரசு அறிவித்துள்ளது. அரசு முடிந்த உதவிகளை செய்யும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
மேலும்
-
ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா: உயர்நீதிமன்றம் கேள்வி
-
நக்சலிசத்தை ஒழிக்க பாதுகாப்பு படை முக்கிய பங்கு வகிக்கும்: அமித்ஷா நம்பிக்கை
-
இளம் தலைவர்கள் பட்டியலில் மத்திய அமைச்சர் ராம் மோகன்; இவர் யார் தெரியுமா?
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழை தொடரும்: வானிலை மையம் தகவல்
-
வக்ப் வாரியத்தில் புதிய உறுப்பினர் நியமனம் இருக்காது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி
-
பொன்முடி மீது இன்னும் கடும் நடவடிக்கை எடுத்திருக்கலாம்: காங்., எம்.பி., கருத்து