வக்ப் வாரியத்தில் புதிய உறுப்பினர் நியமனம் இருக்காது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

புதுடில்லி: வக்ப் வாரிய திருத்த புதிய உறுப்பினர் நியமனம் இருக்காது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக, காங்கிரஸ், சமாஜ்வாதி, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், ஏராளமான முஸ்லிம் அமைப்புகள் என, 90-க்கும் அதிகமான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வில் ஒன்றாக சேர்த்து நேற்று விசாரிக்கப்பட்டது. அப்போது, 'வக்ப் சொத்துக்களை உறுதிப்படுத்தும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டர்களுக்கு கொடுத்தது எந்த வகையில் நியாயம்; ஹிந்து மத சொத்துக்களை நிர்வகிக்கும் குழுவில் பிற மதத்தை சேர்ந்தவர்களையும் அனுமதிக்க முடியுமா?' என, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது: மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. லட்சக்கணக்கானோரிடம் இருந்து கிராமங்கள் வக்ப் சொத்தாக எடுத்துக் கொள்ளப்படுவதாக புகார் வந்தது. பல இடங்கள் வக்ப் சொத்தாக உரிமை கோரப்படுகின்றன. இந்த சட்டத்தை நிறுத்தி வைப்பது என்பது ஒரு கடுமையான நடவடிக்கையாக இருக்கும். இந்த வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது: சட்டத்தில் சில நேர்மறையான விஷயங்கள் உள்ளன . சட்டத்திற்கு முழு தடை விதிக்க மாட்டோம். தற்போதைய சூழ்நிலை மாறுவதையும் நாங்கள் விரும்பவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, தற்போதுள்ள சூழ்நிலைக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.
தொடர்ந்து, சொலிசிட்டர் ஜெனரல், இந்த வழக்கில் சில ஆவணங்கள் தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் எனக்கூறியதுடன், அதுவரை புதிய நியமனங்கள் இருக்காது.வக்ப் என அறிவிக்கப்பட்ட சொத்துகளில் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள், வக்ப் வாரியம் ஏழு நாட்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், இச்சட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து ரிட் மனுக்களை மட்டும் விசாரிப்போம். 100 அல்லது 200 மனுக்களை விசாரிப்பது என்பது சாத்தியம் இல்லாதது. ஐந்து மனுக்களை தவிர மற்ற மனுக்கள் முடித்து வைக்கப்பட்டதாக கருதப்படும் என தெரிவித்ததுடன் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர். இதன் பிறகு மத்திய அரசின் பதில் மனுவுக்கு, மனுதாரர்கள் ஐந்து நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மே 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.










மேலும்
-
ம.தி.மு.க.,வில் கோஷ்டிப்பூசல்; பதவி விலகினார் துரை வைகோ
-
கனடாவில் இந்திய மாணவி சுட்டுக்கொலை; 4 மாதங்களில் 4 பேர் உயிரிழப்பு!
-
துணை ஜனாதிபதியை சந்தித்தார் கவர்னர் ரவி!
-
சினிமாவில் கிடைத்த புகழ் வெளிச்சம் அரசியலுக்கு உதவாது!
-
கர்நாடகாவில் பிரபல தாதா மகன் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
-
வாரிசு அரசியலை வெளிக்காட்டும் பட்டியல்!