'கவர்னர் இனி வேந்தராக இருக்க முடியாது'

16

சென்னை:“கவர்னர் இனி வேந்தராக இருக்க முடியாது; தமிழக அரசு நியமிப்பவரே வேந்தராக இருப்பார்,” என, தி.மு.க., வழக்கறிஞரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான வில்சன் கூறினார்.

அவர் அளித்த பேட்டி:



உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கி உள்ளது. இனி, சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். மாநில அரசின் அமைச்சரவை எடுக்கும் முடிவின்படி நடந்துகொள்ள வேண்டும். சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு, கவர்னர் ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என, தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், 10 மசோதாக்கள் மீது, கவர்னர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், முதல்வர் அறிவுரையின்படி வழக்கு தாக்கல் செய்தோம். அந்த, 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அவை நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.



சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க, கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு சட்ட மசோதா வந்தால், 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்ப முடிவெடுத்தால் மூன்று மாதங்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இந்த வழக்கின் வழியாக, அனைத்து மாநிலங்களின் சுயாட்சியை, முதல்வர் ஸ்டாலின் நிலைநாட்டியுள்ளார்.


தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கவர்னர் இடையூறாக இருந்தால், நீதிமன்றத்தை அணுகலாம் என்ற தீர்ப்பை பெற்றுள்ளார். அனைத்து மாநிலங்களுக்கும், இந்த தீர்ப்பு பொருந்தும். இனி வரும் காலங்களில், கவர்னர் காலம் தாழ்த்த முடியாது. அரசுக்கு நண்பராக, வழிகாட்டியாக, ஆலோசகராக கவர்னர் இருக்க வேண்டும். முட்டுக்கட்டை போடக்கூடாது என, நிறைய அறிவுரைகளை, நீதிபதிகள் வழங்கி உள்ளனர்.

இது, அனைத்து மாநில கவர்னர்களுக்கும் பொருந்தும். இந்த மசோதாக்கள், கவர்னரை வேந்தர் பதவியில் இருந்து நீக்குவதற்கு இயற்றப்பட்டன. கவர்னர் தற்போது, வேந்தர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார். தமிழக அரசு நியமிப்பவர்களே வேந்தராக இருப்பர். இவ்வாறு அவர் கூறினார்.

10 மசோதாக்கள் விபரம்




மீன்வள பல்கலை திருத்த சட்ட மசோதா


கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை திருத்த சட்ட மசோதா


பல்கலைகள் திருத்த சட்ட மசோதா


டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலை திருத்த சட்ட மசோதா


டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை திருத்த சட்ட மசோதா


வேளாண்மை பல்கலை திருத்த சட்ட மசோதா


தமிழ்நாடு பல்கலை சட்டங்கள் இரண்டாம் திருத்த சட்ட மசோதா


தமிழ் பல்கலை இரண்டாம் திருத்த சட்ட மசோதா


மீன்வள பல்கலை இரண்டாம் திருத்த சட்ட மசோதா


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை திருத்த சட்ட மசோதா.


பல்கலைகளுக்கான இந்த திருத்த சட்ட மசோதாவின்படி, துணை வேந்தர் நியமனம், நீக்கம் தொடர்பான அதிகாரம், வேந்தரிடம் இருந்து தமிழக அரசுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


தமிழ்நாடு மீன்வள பல்கலை, தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலை என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement