வாகனங்களுக்கான கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் என்ன சிக்கல்? நீலகிரி கலெக்டரிடம் ஐகோர்ட் அறிக்கை கேட்பு
சென்னை:ஊட்டிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கான கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில், என்னென்ன சிக்கல்கள் உள்ளன என்பது குறித்து தெரிவிக்கும்படி, நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலை வாசஸ்தலங்களில், எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது தொடர்பாக, சென்னை ஐ.ஐ.டி., மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன.
கடையடைப்பு
இந்த ஆய்வுகள் நிறைவு பெற, கால தாமதமாகும் என்பதால், கோடை விடுமுறையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், ஊட்டி மற்றும் கொடைக்கானலில் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு உத்தரவிட்டது.
இந்த வாகன கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊட்டியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. வாகன கட்டுப்பாடு உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நீலகிரி மாவட்ட கலெக்டர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜரான நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா கூறியதாவது:
மாவட்ட நிர்வாகம் சார்பில், உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இருப்பினும், சுற்றுலா வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
சுற்றுலா வாகனங்கள் எவை, வணிகம் சார்ந்த பணிகளுக்காக தினமும் வருபவர்கள் யார், உள்ளூரில் உள்ள உறவினர்களை பார்க்க வருபவர்கள் யார் யார் என்பதை கண்டறிவதில் சிக்கல்கள் உள்ளன.
மே மாதத்தில் அரசு சார்பில் பல்வேறு நிகழ்வுகள் நடக்கவுள்ளன. எனவே, அந்நேரத்தில் வாகன கட்டுப்பாடுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், ஏப்ரல், 1 முதல், 6ம் தேதி வரையிலான சுற்றுலா வாகனங்கள் வருகை குறித்த புள்ளிவிபரத்தையும் அளித்தார்.
அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''முதல்வர், சமீபத்தில் அரசு முறை பயணமாக ஊட்டி சென்றார்.
''அப்போது, பன்னடுக்கு வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்துள்ளார். இ- - பாஸ் வழங்கல், சுற்றுலா வாகனங்களுக்கான கட்டுப்பாடு போன்றவை தொடர்பாக எழுப்பிய விஷயங்களை, நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்,'' என்றார்.
சிக்கல்கள்
இதையடுத்து நீதிபதிகள், சுற்றுலா வாகனங்களுக்கான கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன என்பது குறித்து, மாவட்ட கலெக்டர் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும், ஊட்டியில் சுற்றுலா பயணியர் விரும்பிய இடங்களுக்கு செல்லும் வகையிலான பஸ்கள், பன்னடுக்கு வாகன நிறுத்தம் உள்ளிட்ட முதல்வரின் அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்து, விசாரணையை வரும், 25ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
மேலும்
-
நக்சலிசத்தை ஒழிக்க பாதுகாப்பு படை முக்கிய பங்கு வகிக்கும்: அமித்ஷா நம்பிக்கை
-
இளம் தலைவர்கள் பட்டியலில் மத்திய அமைச்சர் ராம் மோகன்; இவர் யார் தெரியுமா?
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழை தொடரும்: வானிலை மையம் தகவல்
-
வக்ப் வாரியத்தில் புதிய உறுப்பினர் நியமனம் இருக்காது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி
-
பொன்முடி மீது இன்னும் கடும் நடவடிக்கை எடுத்திருக்கலாம்: காங்., எம்.பி., கருத்து
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 22 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்