'விசாரணைக்கு சென்றவர் மர்ம மரணம் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யுங்கள்' உயர் நீதிமன்றம் உத்தரவு

1

சென்னை:தர்மபுரியில் யானை வேட்டையாடப்பட்ட வழக்கில், விசாரணைக்கு அழைத்து சென்று, மர்மமான முறையில் இறந்தவரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே ஏமனுார் வனப்பகுதியில், தந்தத்துக்காக ஆண் யானையை சுட்டுக் கொன்று உடல் எரிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட, பென்னாகரம் கொங்கரப்பட்டி பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் மட்டும் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி சித்ரா, தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில், கடந்த மாதம் 19ல் புகார் அளித்தார்.

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட செந்தில், வனத்துறையினரை தாக்கிவிட்டு கைவிலங்குடன் தப்பியோடியதாகவும், அவரை தேடி வருவதாகவும், மாவட்ட வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின், செந்தில் சடலம், வனப்பகுதியில் அழுகிய நிலையில், நாட்டு துப்பாக்கியுடன் கண்டெடுக்கப்பட்டது.

இந்நிலையில், 'என் கணவரின் மர்ம மரணம் குறித்த விசாரணையை, சி.பி.ஐ., அல்லது வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும்; வனத்துறையினர் அவரை அடித்து துன்புறுத்தி கொன்று விட்டனர். எனவே, கணவரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் மனைவி சித்ரா மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆனந்த நாராயணன், வழக்கறிஞர் பாலு ஆஜராகினர்.

இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

விசாரணைக்கு அழைத்து சென்று, காவலில் துன்புறுத்தியதற்கான முகாந்திரம் இருப்பதால், செந்தில் உடலை மறு பிரேத பரிசோதனை செய்வது அவசியம் என, நீதிமன்றம் கருதுகிறது.

சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவ கல்லுாரி தடயவியல் மருத்துவ துறை தலைவர் டாக்டர் கோகுலரமணன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லுாரி தடயவியல் மருத்துவத்துறை தலைவர் டாக்டர் தண்டர், செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மூத்த உதவி பேராசிரியர் என்.கார்த்திகேயன் ஆகிய மூன்று பேர் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.

பிரேத பரிசோதனையை, வரும், 10ம் தேதி அல்லது அதற்கு முன் முடிக்க வேண்டும். இந்த நடவடிக்கை முழுதும் வீடியோவாக பதிவு செய்ய வேண்டும். பிரேத பரிசோதனை தொடர்பான விபரங்களை, வரும் 15ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்

தர்மபுரி மாவட்ட வனத்துறையினரால், விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட, பென்னாகரத்தை சேர்ந்த செந்தில் என்ற இளைஞர், காட்டிலிருந்து பிணமாக கண்டெடுக்கப் பட்டார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி, தமிழக காவல்துறை உத்தரவிட்டு உள்ளது. செந்தில் குடும்பத்திற்கு, நீதியை பெற்றுத் தர வேண்டியது, தமிழக அரசின் கடமை. அதனால், வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

- ராமதாஸ்,

பா.ம.க., நிறுவனர்.


சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:

பா.ம.க., - ஜி.கே.மணி: கட்டட கூலித்தொழிலாளி செந்தில், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வனப்பகுதியில் சடலமாக கிடந்துள்ளார். அவரது இறப்பில் மர்மம் உள்ளதாக, அவரது மனைவி புகார் அளித்துள்ளார். இந்த மரணம் தொடர்பாக, வனத்துறையினர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளனர்.

கைவிலங்கு போட்டு அழைத்து செல்லப்பட்ட செந்தில், எப்படி தப்பி ஓட முடியும். அவரது உடலில் துப்பாக்கி குண்டுகள் இருந்தது, பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும். அவரது குடும்பத்திற்கு, அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

அமைச்சர் பொன்முடி:
யானை இறந்தது குறித்து, மார்ச் 1ம்தேதி தகவல் கிடைத்தது. ஐந்து சிறப்பு விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டன. இதுதொடர்பான விசாரணைக்கு, 20 பேர் ஆஜராகினர். அவர்களில் சிலர் யானையை கொன்றதாக ஒப்புக் கொண்டனர். யானை தந்தம் அதிக விலைக்கு விற்பதால் அவை கொல்லப்படுகின்றன. இது தொடர்பாக வழக்குகள் பதியப்படுகின்றன.

வனத்துறையினர் பிடியில் இருந்த செந்தில் தலைமறைவான நிலையில், தர்மபுரி வனக்கோட்டத்தில் ஆயுதத்துடன் சடலம் கிடப்பதாக, மாவட்ட வன அலுவலருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று அவரது உடலை மீட்டனர். தர்மபுரி மருத்துவமனையில், நீதிபதி முன்னிலையில் செந்தில் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. வனத்துறை அதிகாரியே தவறு செய்திருந்தாலும், வேறு யாராக இருந்தாலும், விசாரணை அடிப்படையில் உரிய தண்டனை பெற்று தரப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

'அதிகாரி தவறு செய்திருந்தால் நடவடிக்கை'

Advertisement