நாலுார் கம்மார்பாளையம் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

பொன்னேரி:பொன்னேரி - மீஞ்சூர் நெடுஞ்சாலையில் உள்ள நாலுார் ஏரிக்கரை பகுதியில் இருந்து, நாலுார் கம்மவார்பாளையம் கிராமத்திற்கு செல்லும் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலை முழுதும் சரளை கற்கள் பெயர்ந்தும், பள்ளங்கள் ஏற்பட்டும் உள்ளன.

இச்சாலையில் தனியார் கன்டெய்னர் கிடங்குகள் உள்ளன. இவற்றிற்கு லாரிகளில் கன்டெய்னர் கொண்டு செல்லும்போது தடுமாற்றத்துடன் பயணிக்கின்றன.

பள்ளங்களில் சிக்கிய லாரிகளில் இருந்து கன்டெய்னர்கள் கீழே விழுந்து விபத்துக்கள் நேரிடும் அபாயமும் உள்ளதால், அவற்றை பின்தொடர்ந்து செல்லும் வாகன ஒட்டிகள் அச்சத்திற்கு ஆளாகின்றனர்.

இச்சாலையில், நாலுார் ஏரியின் கலங்கல் பகுதி தாழ்வாக அமைந்து உள்ளது.

மழைகக்காலங்களில் ஏரி நிரம்பி, கலங்கல் வழியாக மழைநீர் சாலையை கடந்து வெளியேறும்போது போக்குவரத்து பாதிக்கிறது.

தற்போது நாலுார் கம்மவார்பாளையம் - மடியூர் கிராமங்கள் இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டு உள்ளதால், ஞாயிறு, பசுவன்பாளையம், கன்னியம்பாளையம், நெற்குன்றம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் மேற்கண்ட சாலையை பயன்படுத்த துவங்கி உள்ளனர்.

வாகன போக்குவரத்து அதிகரித்து வருவதால், மேற்கண்ட சாலையை சீரமைக்கவும், ஏரியின் கலங்கல் பகுதியில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Advertisement