அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி... 2 சதவீதம் உயர்வு; அரசுக்கு ரூ.50 கோடி கூடுதல் செலவு

2

புதுச்சேரி: மத்திய அரசு ஊழியர்களை தொடர்ந்து புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக அரசுக்கு 50 கோடி ரூபாய் செலவாகும்.

பணவீக்கம் காரணமாக விலைவாசி ஏற்றம் தரும் சமயத்தில் அதை சமாளிக்கும் விதமாக நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில், அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பள விகிதத்தின்படி ஒரு குறிப்பிட்ட சதவீதம் உயர்த்தி அவ்வப்போது அகவிலைப்படி அறிவிக்கப்படுகிறது,

இது ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தினை கணக்கிட்டு ஆண்டிற்கு இருமுறை அறிவிக்கப்படுகிறது. அகவிலைப்படி உயர்த்தப்படும்போது, அது அவர்களின் மாதச் சம்பளத்தை அதிகப்படுத்துகிறது. அதோடு, அவர்களின் அடிப்படை சம்பளத்தில் சேர்க்கிறது.

அன்மையில் மத்திய அரசு இவ்வாண்டில் இரண்டாவது முறையாக 2 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. அதனடிப்படையில் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாத அகவிலைப்படி அரியர்ஸ் உடன் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து, அரசின் நிதித் துறை சார்பு செயலர் சிவக்குமார், அனைத்து துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கையில் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் 53 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 2 சதவீதம் உயர்த்தி, 55 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு, ஜனவரி 1ம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மாநிலம் முழுவதும் 22 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயன் அடைய உள்ளனர். புதுச்சேரி அரசுக்கு ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்.

இருப்பினும், இந்த அகவிலைப் படி உயர்வு அனைத்து அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பகுதிநேர ஊழியர்களுக்கும் பொருந்துமா என இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இது குறித்து நிதித் துறை அதிகாரிகள் கூறும்போது, மாநிலம் தற்போது ஓய்வு பெற்ற ஊழியர்கள் 16 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து கோப்பு அனுப்பபட்டுள்ளது.

இவர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அரசாணை விரைவில் வெளியாகும். அடுத்தக்கட்டமாக தினக்கூலி ஊழியர்கள், பகுதி நேர ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பினை தற்போது போடப்பட்டுள்ள அரசாணை பின் பற்றி தனியாக வெளியாகும் என்றனர்.

வழக்கமாக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை அகவிலைப்படி கிடைக்கும். ஆனால் இப்போது பணவீக்கம், விலைவாசி உயர்வினை ஆராய்ந்து 2 சதவீதம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு ஊழியர்கள் மத்தியில் பெரிய உற்சாகம் இல்லை.

Advertisement