மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி

7

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களில், முறைகேடு புகாரில் சிக்காதவர் டிசம்பர் மாதம் வரை பணியில் தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இது பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு சற்று நிம்மதி அளித்துள்ளது.


மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநில அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கான 24,640 பணியிடங்களை நிரப்ப, 2016ல் மாநில அரசு தேர்வு நடத்தியது. 23 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதினர்; 25,753 பேருக்கு பணி ஆணைகள் அனுப்பப்பட்டன.
இந்த தேர்வு நடைமுறையில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.


வழக்கை விசாரித்த கோல்கட்டா உயர் நீதிமன்றம், 25,753 ஆசிரியர்கள் மற்றும் இதர கல்வி பணியாளர்கள் பணி நியமனத்தை ரத்து செய்தது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேற்கு வங்க அரசு பள்ளிகளுக்கான, 25,753 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.


இதையடுத்து, உடனடியாக பணியில் இருந்து நீக்கப்படுவதாலும், ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறைக்கு அதிக காலம் ஆவதாலும் மாணவ- மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும். இதனால் இந்த வருடம் இறுதி வரை தொடர்ந்து பணியில் நீடிக்க அனுமதிக்க வேண்டும் என மேற்கு வங்க அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சய் கன்னா, சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பணி நீக்கப்பட்ட ஆசிரியர்கள் டிசம்பர் 31ம் தேதி வரை பணியாற்ற அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மாணவர்களின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், புதிய ஆசிரியர் தேர்வுக்கான நடைமுறையை மே 31ம் தேதிக்குள் தொடங்கி, டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

திரிணமுல் காங்கிரஸ் வரவேற்பு

இந்த தீர்ப்பை திரிணமுல் காங்கிரஸ் வரவேற்றுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை டிசம்பர் மாதம் வரை பணியில் தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். மக்களின் எதிர்காலத்தை சீர்குலைப்பதற்கான பா.ஜ., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல் சதிகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement