தர்பூசணி உடைத்து கண்டன போராட்டம்

திண்டிவனம் : திண்டிவனம் சப்கலெக்டர் அலுவலகம் எதிரில், விவசாயிகள் தர்பூசணி, குளிர்பானங்களை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர், தர்பூசணியில் ஊசி மூலம் செயற்கை சாயம் செலுத்தப்படுவதாக சமீபத்தில் கூறினார். இதனால் தர்பூசணி வியாபாரத்தில் சரிவு ஏற்பட்டு, விவசாயிகள் பாதிக்கப்பட்டு நஷ்டமடைந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக விவசாயிகள் சங்கம் விழுப்புரம் மாவட்டம் சார்பில் நேற்று சப் கலெக்டர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் சந்திரபிரபு தலைமை தாங்கினார். உணவுத்துறை அதிகாரியின் தவறால் தர்பூசணி விவசாயிகள் பாதிக்கப்பட்டு, தர்பூசணியை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த தர்பூசணியை தரையில் போட்டு உடைத்தும், வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டியும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், சப் கலெக்டர் திவ்யான்சு நிகாமை சந்தித்து, நஷ்ட ஈடு வழங்கக்கோரும் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Advertisement