மொழி பெயர்ப்பு திட்ட அதிகாரிகள் கவர்னருடன் சந்திப்பு

புதுச்சேரி : மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் “பாஷினி''மொழிபெயர்ப்புத் திட்ட அதிகாரிகள் கவர்னரை சந்தித்து பேசினர்.

பல்வேறு மொழிகள் பேசும் இந்திய மக்கள் அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையில் மத்திய அரசின் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் 'பாஷினி' மொழிபெயர்ப்பு செயலியை உருவாக்கி உள்ளது. இந்த செயலி, ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு எழுத்து வடிவில் மொழி பெயர்க்கவும், ஒரு மொழியில் பேசுவதை மற்றொரு மொழியில் மொழிபெயர்க்கவும், ஒரு குறிப்பிட்ட மொழியில் பேசுவதை எழுத்து வடிவில் கொண்டு வரவும் பயன்படுத்தலாம்.

இதன் மூலம் மத்திய அரசின் திட்டங்கள், அனைத்து மொழி பேசும் மக்களையும் சென்றடைய வழி ஏற்படும். அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கும் எளிதில் புரியும் வகையில் அவரவர் தாய்மொழியில் எடுத்துக்கூற உதவியாக இருக்கும்.

ஒரு மாநிலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அந்தமாநிலத்தை சேர்ந்த மக்கள் அவரவர் மொழிகளில் தெரிந்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்றனர்.

இதனை கேட்ட கவர்னர்,“பாஷினி'' செயலியை புதுச்சேரி மக்கள் பயனடையும் வகையில் விரைவில் செயல்படுத்தும் விதமாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார்.இதன் மூலம்புதுச்சேரியில் உள்ளதமிழ், மலையாளம், தெலுங்கு மொழி பேசும் பகுதிகளில் அரசு திட்டங்கள் மக்களுக்கு எளிதாக சென்றடையும்.

சந்திப்பின் போது, தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலர் முத்தம்மா, தேசிய தகவலியல் மைய இயக்குநர் கோபி விஷ்வநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement