கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்திற்கு தரும் முக்கியத்துவம் மைய நுாலகத்திற்கு கிடைக்குமா

மதுரை : மதுரை சிம்மக்கல்லில் உள்ள மாவட்ட மைய நுாலகத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்திற்கு தரும் முக்கியத்துவம் இந்நுாலகத்திற்கும் வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நுாலகம் கடந்தாண்டு ரூ. ஒரு கோடி மதிப்பில் டைல்ஸ் கற்கள் பதிப்பது, நுால்களுக்கு தனி ரேக்குகள், மாற்றுத்திறனாளிக்கான கழிப்பறை, பார்க்கிங் கூரை அமைத்தல் போன்ற பணிகள் நடந்தன. அதேசமயம் நுாலகத்தின் புத்தகங்களை படிக்கும் பிரிவில் போதிய இடவசதி இல்லை. 10க்கும் மேற்பட்டோர் அமர்ந்தாலே சிரமம் ஏற்படுகிறது.

கழிப்பறைகள் போதிய பராமரிப்பின்றி துர்நாற்றம் வீசுகிறது. நாட்டுப்புற கலைகள் குறித்த கலைக்கூடம் பூட்டியே கிடக்கிறது. இங்கேயும் அணில் ஊடுருவி பொருட்களை கடிப்பதால் பாதுகாப்பு கருதி பூட்டி வைத்துள்ளார்களாம். உறுப்பினர்கள் எடுத்துச்சென்ற பல நுால்கள் இன்னும் திரும்பவே இல்லை. அதை மீட்கும் முயற்சியில் நுாலகம் ஈடுபட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்ட கலைஞர் நுாலகத்திற்கு அரசு தரும் முக்கியத்துவம் போன்று, இந்த மைய நுாலகத்திற்கும் அரசு தரவேண்டும். காலத்திற்கேற்ப தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த வேண்டும். அரசு போட்டித்தேர்வுகளில் பங்கேற்போர் விண்ணப்பிக்க நுாலகத்திற்கு இ-சேவை மையம் போன்ற வசதியை மேம்படுத்த வேண்டும்.

Advertisement