ஆண்களுக்கு சேலை உடுத்தி 100 நாள் வேலையில் மோசடி

14

யாத்கிர் : கர்நாடகாவில் நடந்த ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணியாற்றியதாக, சேலை அணிந்து ஆண்கள் போஸ் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, மாவட்ட பஞ்சாயத்து அதிகாரி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.


கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், வேலை தேடி வெளியூர் செல்வதைத் தவிர்க்கவும், மத்திய அரசு, மஹாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

ரூ.370 உயர்வு



இதில், நாள் ஒன்றுக்கு 349 ரூபாய் வழங்கப்பட்டு வந்த கூலித்தொகை நடப்பாண்டு ஏப்., 1 முதல், 370 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், கர்நாடக மாநிலம், யாத்கிர் மாவட்டம், மல்தார் கிராமத்தில் சன்னலிங்கப்பா என்பவரின் பண்ணை அருகில் கால்வாய் அமைக்கும் பணி நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் என பலரும் ஈடுபட்டிருந்தனர்.


இந்த பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களின் குழு படம், அரசின் என்.எம்.எஸ்., எனும் தேசிய கண்காணிப்பு அமைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்த படத்தை பார்த்த அதிகாரிகள், சேலை அணிந்திருந்த நான்கு பெண்களின் தோற்றத்தில் வித்தியாசம் இருந்ததை கவனித்தனர்.


அந்த படத்தை உற்றுப் பார்த்தபோது, அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், அந்த நான்கு பேரும் சேலை உடுத்தியிருந்த ஆண்களாகும்.

சஸ்பெண்ட்



இந்த படம் சமூக வலைதளங்களில் பரவியது. ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணத்தில் மோசடி நடந்ததா என்ற சர்ச்சை எழுந்தது.

இதுகுறித்து, மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி லாவிஷ் ஓராடியா கூறுகையில், ''இச்சம்பவம் பிப்ரவரியில் நடந்துள்ளது. இது தொடர்பாக வந்த புகாரை அடுத்து விசாரணை நடத்தப்பட்டது.

''முறைகேட்டில் ஈடுபட்ட பஞ்சாயத்து அதிகாரி வீரேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நரேகா திட்டத்தின் கீழ், இதுவரை பணம் எதுவும் விடுவிக்கப்படவில்லை,'' என்றார்.

Advertisement