மாவட்ட தலைவர்களுக்கு அதிக அதிகாரம் வழங்க காங்கிரஸ் புதிய திட்டம்!

ஆமதாபாத் : காங்கிரசில் மாவட்ட தலைவர்களுக்கு, பொறுப்புடைமையுடன் அதிக அதிகாரம் வழங்குவது உட்பட கட்சியில் அனைத்து நிலைகளிலும் பெரிய அளவில் சீர்திருத்தம் மேற்கொள்ள கட்சியின் செயற்குழுவில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் தேசிய நினைவிடத்தில் நடக்கிறது. 'நீதியின் பாதை' என்ற பெயரில் நடக்கும் இந்த செயற்குழுவின் நிறைவு நாளான இன்று, 1,700க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
நேற்று துவங்கிய செயற்குழு கூட்டம் தொடர்பாக கட்சியின் பொதுச் செயலர் வேணுகோபால் கூறியதாவது:
இந்த ஆண்டில், கட்சியில் மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம். கட்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இது தொடர்பாக நிர்வாகிகள் தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.
கட்சியின் பொதுச் செயலர்கள், மாநில தலைவர்கள் என, அனைவரும் ஒருமித்த கருத்துடன் உள்ளனர். அதாவது, கட்சியின் மாவட்ட தலைவர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை அனைவரும் வலியுறுத்திஉள்ளனர். பொறுப்புடைமையுடன், இந்த அதிகாரமும் வழங்கப்படும்.
இது தொடர்பான வழிகாட்டுதல் நடைமுறைகள், இன்று நடக்க உள்ள செயற்குழு கூட்டத்தில் இறுதி செய்யப்படும். சர்தார் வல்லபபாய் படேல் வழிகாட்டியபடி, சமூக நீதிக்கானப் பாதையில் காங்கிரஸ் தொடர்ந்து பயணிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
கட்சியின் மற்றொரு பொதுச் செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சச்சின் பைலட் கூறியதாவது:
மாவட்ட தலைவர்களை பொறுப்பாக்கும் வகையிலும், கட்சியை வலுப்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்குவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. இதன் வாயிலாக பூத் நிலையில் இருந்து மாவட்டம் வரை கட்சி வலுப்படும்.
வீடு வீடாகச் சென்று கட்சியை வளர்ப்பதுடன், கட்சியின் ஆதரவை விரிவுபடுத்துவதே இதன் நோக்கம். இந்த ஆண்டை, கட்சியை வலுப்படுத்தும் ஆண்டாக அறிவித்துள்ளோம். தேர்தல்களில் போட்டியிடுவது என்பது வெற்றி பெறுவதற்காகவே. அடுத்து வரும் தேர்தல்களில் கட்சி மிகவும் வலுவாக களமிறங்கும் வகையில், இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை நேற்று துவக்கி வைத்து, அதன் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., ஆகியவை மக்களை மத ரீதியில் பிளவுபடுத்துவதை தங்கள் கொள்கையாக வைத்துள்ளன.நாட்டின் சுதந்திரத்துக்காக எந்த ஒரு பங்களிப்பையும் அளிக்காத அவை, நம் நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய தலைவர்களை தங்களுக்கு ஏற்ப பயன்படுத்தி வருகின்றன.
மஹாத்மா காந்தி, சர்தார் வல்லபபாய் படேல் போன்ற தலைவர்களை தங்களுடைய அரசியலுக்காக பா.ஜ., கடத்த முயற்சிக்கிறது. அவர்களை தாங்கள் தான் கவுரப்படுத்துவதாக கூறுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அந்த கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம், 79, திடீரென மயக்கம் அடைந்தார்.காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரை ஏந்தி ஆம்புலன்சில் ஏற்றினர். பின், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து காங்., நிர்வாகிகள் கூறுகையில், 'அதிக வெப்பம் காரணமாக சிதம்பரத்துக்கு சோர்வு ஏற்பட்டு, மயக்கம் அடைந்து விட்டார். தற்போது அவர் நலமாக உள்ளார். டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்' என்றனர்.


மேலும்
-
மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை
-
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா: துணை ஜனாதிபதி எதிர்ப்பு
-
விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்வு: உறுதி செய்ய தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்