இறக்குமதியான பழங்கள் அழுகியதால் சுங்கத்துறைக்கு ரூ.50 லட்சம் அபராதம்
லுாதியானா : வெளிநாட்டில் இருந்து இறக்குமதியான கிவி பழங்கள் அழுகியதால், ஆவணங்கள் வழங்காமல், காலதாமதம் செய்த சுங்கத்துறைக்கு, 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
பஞ்சாபின் லுாதியானாவைச் சேர்ந்த பழம் இறக்குமதி நிறுவனம், கடந்த 2023-ல், தென் அமெரிக்க நாடான சிலியில் இருந்து கிவி பழங்களை இறக்குமதி செய்தது.
காலதாமதம்
மேற்கு ஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் வழியாக, குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு அந்த பழங்கள் கொண்டு வரப்பட்டன.
மொத்தம் 89,000 கிலோ எடையில், 66 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழங்களை, 'டிரான்ஸ்லைனர் மேரிடைம் பிரைவேட் லிமிடெட்' என்ற ஷிப்பிங் நிறுவனம் எடுத்து வந்தது.
இறக்குமதியாகும் சரக்குகள் பற்றிய விரிவான தகவல்கள் அடங்கிய ஆவணத்தை வழங்க சுங்கத்துறை தவறியதால், துறைமுகத்திலேயே மூன்று மாதங்களாக கிவி பழங்கள் இருந்தன. இதனால், லுாதியானாவில் உள்ள கிடங்குக்கு திரும்ப கொண்டு வந்தபோது முற்றிலுமாக அழுகி விட்டன.
தவறான அணுகுமுறை
நஷ்டமடைந்த பழ நிறுவனம், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் பிரகாஷ் சர்மா, சஞ்சய் வசிஸ்த் அடங்கிய அமர்வு, சுங்கத் துறைக்கும் ஷிப்பிங் நிறுவனத்துக்கும் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தது.
தீர்ப்பில், 'விரைவாக அழுகும் பொருட்கள் பற்றிய உணர்வே இல்லாமல் செயல்பட்ட சுங்கத்துறை மற்றும் கப்பல் நிறுவன அதிகாரிகளின் அணுகுமுறை அதிர்ச்சி அளிக்கிறது.
'கால தாமதத்தால் நஷ்டமடைந்த மனுதாரருக்கு, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், பழம் இறக்குமதிக்காக செலுத்திய சுங்கக் கட்டணத்தையும் ஆண்டுக்கு 6 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
'இதுபோன்று எளிதில் அழுகும் பொருட்களை கையாள்வதில் உறுதியான வழிமுறைகளை சுங்கத் துறையினர் வகுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை
-
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா: துணை ஜனாதிபதி எதிர்ப்பு
-
விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்வு: உறுதி செய்ய தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்