அதிக குப்பை சேர்ந்தால் எச்சரிக்கும் ஏ.ஐ., கேமரா; மதுரை நகரில் 80 இடங்களில் நிறுவப்படுகிறது

1

மதுரை: மதுரை மாநகராட்சி பகுதியில் அதிக குப்பை சேரும் இடங்களை கண்டறிந்து அகற்ற ஏ.ஐ., தொழில்நுட்பம் கொண்ட கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட உள்ளன.


மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் நாள் ஒன்றுக்கு 916 மெட்ரிக் டன் குப்பை சேர்கின்றன. இதை அகற்ற ஒப்பந்தம் அடிப்படையில் தனியார் நிறுவனம் செயல்படுகிறது. இருப்பினும் வைகை கரையோரங்கள், மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் அதிக குப்பை சேர்ந்து சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துவதாக சர்ச்சை எழுந்தது.

இதற்கு தீர்வு காண அதிக குப்பை சேரும் இடங்களில் ஏ.ஐ., தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் நிறுவுவதற்காக தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் திட்டத்திற்கு (டி.ஏ.என். ஐ.ஐ.,) கீழ் கருத்துரு அனுப்பப்பட்டது. இதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது. இதனால் விரைவில் மாநகராட்சி பகுதியில் ஏ.ஐ., கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

அதிகாரி ஒருவர் கூறியதாவது: வைகையாற்றின் கரைகள், மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி 80 இடங்கள் அதிக குப்பை சேரும் இடமாக கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதி தொட்டிகளில் குறிப்பிட்ட நேரத்தில் குப்பையை அகற்றினாலும் அடுத்த சில மணிநேரத்தில் நிரம்பி வழிகின்றன. இதுபோன்ற இடங்களில் இந்த ஏ.ஐ., கேமராக்கள் வைக்கப்பட்டால் குப்பை நிரம்பியதும் சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர், மாநகராட்சி அதிகாரிகள், தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் அலைபேசி எண்களுக்கு போட்டோவுடன் 'அலர்ட்' செய்யும் வகையிலான தொழில்நுட்பம் உள்ளது. இத்தகவல் பெற்ற பின் உடன் குப்பை அகற்றப்படும். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் முதற்கட்டமாக 40 இடங்களிலும், இரண்டாம் கட்டத்தில் மேலும் 40 இடங்களிலும் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement