'அதிக எத்தனால் பிழிதிறன் கொண்ட மக்காச்சோள ரகம் தேவை' கோவையில் நடந்த பயிலரங்கில் வலியுறுத்தல்

கோவை; கோவை, வேளாண் பல்கலையில், 68வது வருடாந்திர மக்காச்சோள பயிலரங்கு நடந்தது. இதில், ஐ.சி.ஏ.ஆர்., பண்ணைக்காடுகள் மற்றும் பயிர் பன்முகப்படுத்துதல் துறை (எப்.எப்.சி.,) உதவி தலைமை இயக்குநர் பிரதான் பேசியதாவது:
நடப்பாண்டில் நாடு முழுதும் 38 மில்லியன் டன் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இளவேனில் பருவ அறுவடை எஞ்சியுள்ள நிலையில், 43 மில்லியன் டன் வரை உயரக்கூடும். இது, 2024ம் ஆண்டை விட, 10 சதவீதம் அதிகம்.
2047ல் 'வளர்ந்த இந்தியா' இலக்கை எட்ட, மகசூலை இரண்டு மடங்கு அதிகரிக்க வேண்டும். காரிப் பருவ சாகுபடிதான் நம்முன் இருக்கும் மிகப்பெரும் சவால். வறட்சி, மழை என பருவகால சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட ரகங்களை உருவாக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக ஐ.சி.ஏ.ஆர்., பயிர் அறிவியல் துறை துணை தலைமை இயக்குநர் யாதவா பேசியதாவது:
2011ல் ஏக்கருக்கு 2.4 டன்னாக இருந்த உற்பத்தித் திறன் தற்போது 3.3 டன்னாக அதிகரித்துள்ளது. அறுவடை செய்யப்படும் மக்காச்சோளத்தில் 40 சதவீதம், பொதுத்துறை நிறுவனங்களால் வெளியிடப்பட்ட ரகங்கள்.
ஆய்வுகள் தொடர்பான அனைத்துத் தரவுகளும் டிஜிட்டல் வடிவில் சேகரிக்கப்பட வேண்டும். கோழித்தீவனம், எத்தனால் உற்பத்திக்கு உகந்த வீரிய ரகங்கள் கண்டறியப்பட வேண்டும். அமெரிக்காவில் ஒரு டன் மக்காச்சோளத்துக்கு 420 லிட்., எத்தனால் கிடைக்கிறது.
இந்தியாவில், இது 350-380 லிட்டராக உள்ளது. இதனை அதிகரிக்கும் வகையில் வீரிய ரகங்களை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
வேளாண் பல்கலை தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குநர் ரவிகேசன் கூறியதாவது:
தேசிய அளவில் மக்காச்சோளம் தொடர்பாக 32 மையங்களில் ஆய்வுகள் நடக்கின்றன.
ஆண்டுதோறும் இந்த ஆய்வுகளின் தற்போதைய போக்கு, முடிவுகள் குறித்து விவாதிக்கப்படும்.
உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரித்தல் குறித்து விவாதிக்கப்படும். தனியார் துறையினரும் ஆய்வில் ஈடுபட்டிருப்பர்.
அவர்களின் ஆய்வுப் போக்கும், எங்களின் ஆய்வுப் போக்கும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளப்படும். அடுத்து என்ன ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கும் வகையில், வருடாந்திர பயிலரங்கு நடத்தப்படுகிறது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், பல்வேறு ஆய்வு மையங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய இதழ் வெளியிடப்பட்டது.
லூதியானா, இந்திய மக்காச்சோள ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் ஜேட், வேளாண் பல்கலை, ஆராய்ச்சி இயக்குநர் ரவீந்திரன், ஒருங்கிணைந்த மக்காச்சோள ஆராய்ச்சித் திட்ட நோடல் அலுவலர் ரமேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
வேளாண் பல்கலை துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன் பேசுகையில், “தமிழகத்தில் 5 லட்சம் ஹெக்டேரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. சாகுபடிப்பரப்பு அதிகரித்தாலும், உள்மாநிலத் தேவையில் 50 சதவீதத்தைத்கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. கோழித்தீவனத்துக்கான தேவை அதிகமாக உள்ளது. தமிழகத்தில் ஒரு ஆலை எத்தனால் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. தினமும் 2 லட்சம் லிட்டர் உற்பத்தி செய்யப்படுகிறது. இன்னும் சில ஆலைகள் விரைவில் வரவுள்ளன. இதனால், அதிக ஸ்டார்ச் கொண்ட மக்காச்சோள ரகங்களுக்கான தேவை அதிகரிக்கும்” என்றார்.