'பிளே-ஆப்' சுற்றில் இந்தியா: 'பில்லி ஜீன் கிங்' டென்னிசில்

புனே: 'பில்லி ஜீன் கிங்' டென்னிஸ் 'பிளே-ஆப்' சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியது.

பெண்கள் அணிகளுக்கான 'பில்லி ஜீன் கிங்' கோப்பை டென்னிஸ் 62வது சீசன் நடக்கிறது. புனேயில், 'ஆசிய--ஓசியானா - குரூப் 1' போட்டி நடந்தது. இதில் இந்தியா, தென் கொரியா, தாய்லாந்து, நியூசிலாந்து, ஹாங்காங், சீன தைபே என 6 அணிகள் பங்கேற்றன. முதல் போட்டியில் நியூசிலாந்திடம் வீழ்ந்த இந்தியா, அடுத்த மூன்று போட்டியில் தாய்லாந்து, ஹாங்காங், சீனதைபே அணிகளை வென்றது.

கடைசி போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா 5-7, 6-3, 7-6 என தென் கொரியாவின் சோஹியுன் பார்க்கை வீழ்த்தினார். இரண்டாவது போட்டியில் இந்தியாவின் சஹாஜா 3-6, 4-6 என தென் கொரியாவின் தயோன் பேக்கிடம் தோல்வியடைந்தார்.
இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, பிரார்த்தனா தாம்பரே ஜோடி 6-4, 6-3 என தென் கொரியாவின் சோஹியுன் பார்க், தபின் கிம் ஜோடியை வென்றது. முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் 4வது வெற்றி பெற்றது.


புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடித்த இந்தியா, 5 ஆண்டுகளுக்கு பின் இத்தொடரின் 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்தது. கடைசியாக 2020ல் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறிய இந்தியா, லாட்வியா அணியிடம் தோல்வியடைந்தது.

Advertisement