புழுதிவாக்கத்தில் பாதாள சாக்கடை அடைப்பு நிலத்தடி நீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம்

புழுதிவாக்கம்:பெருங்குடி மண்டலம், புழுதிவாக்கம் ராமலிங்கா நகர், சதாசிவம் நகர் உட்பட ஒன்பது நகர்களில், 15,000த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராமலிங்கா நகர் பிரதான சாலையில் அமைந்துள்ள பாதாள சாக்கடை குழாய் வாயிலாக, குறிப்பிட்ட பகுதிகளின் 100க்கும் மேற்பட்ட தெரு கழிவுநீர், ஏ.ஜி.எஸ்., காலனியில் உள்ள உந்து நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து பெருங்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அடைகிறது.
குறிப்பிட்ட பாதாள சாக்கடை குழாய் சேதமடைந்து, அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கழிவுநீர் நேரடியாக நிலத்தடி நீரில் கலப்பதோடு, குடிநீரிலும் கலப்பதாக அப்பகுதிவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:
குறிப்பிட்ட பகுதிகளில், கோடை காலங்களில் நிலத்தடி நீர் பத்தடி ஆழத்தில் தான் காணப்படும். ஆனால், பாதாள சாக்கடை அடைப்பிற்கு பின், இரண்டடியிலேயே நீர் கிடைக்கிறது. அந்நீரும் உப்பாக உள்ளது.
தவிர, குடிநீர் இணைப்பு குழாய், பல இடங்களில் பாதாள சாக்கடையை கடந்து செல்கிறது. இதில், கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அந்த நீரை உபயோகிக்க இயலாத நிலை உள்ளது.
எனவே, தமிழக அரசு குறிப்பிட்ட பகுதிகளில், நிலத்தடி நீரை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து மெட்ரோ துறை அதிகாரிகள் கூறியதாவது:
குறிப்பிட்ட பாதாள சாக்கடை 21 அடி ஆழமுடையதால், டெண்டர் கோரியே பணியை துவக்க இயலும். எனவே, உடனடியாக புதிய குழாய் பதிக்க 'டெண்டர்' விட நடவடிக்கை எடுக்கப்படும்.
தவிர, தற்காலிகமாக அடைப்பு ஏற்பட்டுள்ள 'மேன்ஹோலி'ல் இருந்து, அடுத்த மேன்ஹோலுக்கு, 'டீசல் மோட்டார்' வாயிலாக கழிவுநீர் விடப்படுகிறது.
தவிர, நேரடியாக பெருங்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாயில், மற்றொரு மோட்டோர் வாயிலாக கழிவுநீர் வெளியேற்றப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.