மியான்மரில் இந்திய விமானப்படை விமானம் மீது சைபர் தாக்குதல்; நிவாரணப் பணியின் போது தொந்தரவு

11


பாங்காங்: மியான்மரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்திய விமானப் படை விமானத்தின் சிக்னல்கள் மீது நடுவானில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நம் அண்டை நாடான மியான்மரில், கடந்த மாதம் 29ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால், மியான்மர் தலைநகர் நய்பிடாவ், மண்டாலே உள்ளிட்ட நகரங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. வானுயர்ந்த கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வீடுகள் உள்ளிட்டவை தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 3 ஆயிரத்தை கடந்தது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில், மீட்புப் படையினர் முழு வீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆபரேஷன் பிரம்மா என்ற பெயரில் நமது நாட்டின் பாதுகாப்புப் படையினர் மியான்மர் நிலநடுக்க மீட்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய விமானப் படை விமானத்தின் சிக்னல்கள் மீது நடுவானில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



இந்த சைபர் தாக்குதல்கள் மூலம் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானிகளுக்கு பொய்யான தகவல்கள் கிடைக்க தொடங்கின. இதனால் குழப்பமடைந்த விமானிகள், அவசர கால சிக்னல்களை பயன்படுத்தி உண்மை நிலவரங்களை அறிந்து கொண்டனர். இதனால் சைபர் தாக்குதலை பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

Advertisement