மேட்டூரில் 1,230 மெகா வாட் மின் உற்பத்தி திடீர் நிறுத்தம்

மேட்டூர் : மேட்டூர் அனல் மின் நிலையங்களில், 1,230 மெகா வாட் உற்பத்தி, தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேட்டூரில், 840, 600 மெகா வாட் அனல் மின் நிலையங்கள் உள்ளன. நேற்று வார விடுமுறை, இன்று தமிழ் புத்தாண்டால் ஊழியர்கள் விடுமுறையில் சென்று விட்டனர். அதேநேரம் நேற்று முன்தினம், 17,062 மெகா வாட்டாக இருந்த தமிழக மின் தேவை, 15,351 மெகா வாட்டாக நேற்று சரிந்தது.

இதனால் மேட்டூர், 600 மெகா வாட் அனல்மின் நிலையத்தில் நேற்று காலை, மின் உற்பத்தி தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டது. ஏற்கனவே, 840 மெகா வாட் அனல் மின் நிலையத்தில், மூன்றாம் அலகில், கடந்த டிச., 19ல் விபத்து ஏற்பட்டு மின் உற்பத்தி தடைபட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த, 11ல், ஒன்றாவது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில், நான்காவது அலகில் நேற்று உற்பத்தி நிறுத்தப்பட்டது. மொத்தம், 1,440 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட மேட்டூர் அனல்மின் நிலையங்களில், நேற்று ஒரு அலகில் மட்டும், 210 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. 1,230 மெகா வாட் மின் உற்பத்தி தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement