ரூ.1,299க்கு 'ஏசி' என ஆன்லைனில் மோசடி; அப்பாவிகள் ஏமாறும் அவலம்

2

சென்னை : சமூக வலைதளங்களில், 1,299 ரூபாய்க்கு, 'ஏசி' தருகிறோம் எனக்கூறி, ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. குறைந்த விலை என நம்பி பணத்தை அனுப்பியவர்களுக்கு, 'ஹீட்டர்' அனுப்பப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தத் துவங்கி உள்ளது. வெப்பத்தில் இருந்து தப்பிக்க, பொதுமக்கள், 'ஏசி, ஏர் கூலர், டவர் பேன்' போன்றவற்றை வாங்கி வருகின்றனர். மக்களின் தேவையை அறிந்து, ஆன்லைனில் சிலர் ஏமாற்றவும் துவங்கி உள்ளனர்.


சமூக வலைதளங்களில் சிலர், 1,299 ரூபாய்க்கு, 'ஏசி' தருகிறோம் என்று கூறி விளம்பரம் செய்கின்றனர். தாங்கள் வழங்கும், 'ஏசி'யானது, 30,000 ரூபாய் கொடுத்து வாங்கும், 'ஏசி'யை போன்றே இருக்கும் என்றும் கூறி, ஆர்வத்தை துாண்டுகின்றனர்.


இதைக்காணும், ஏழை மற்றும் நடுத்தர மக்கள், குறைந்த விலைக்கு கிடைக்கிறது எனக்கருதி, அவற்றை வாங்க பணத்தை அனுப்புகின்றனர். அதன்பிறகே, தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்கின்றனர்.


இதுதொடர்பாக, பணம் அனுப்பி ஏமாந்த சிலர் கூறியதாவது: முகநுால் பக்கத்தில், 1,299 ரூபாய்க்கு 'ஏசி' தருகிறோம். இதை விட குறைந்த விலையில் யாரும் தர முடியாது என்று கூறி, ஒருவர் வீடியோ வெளியிட்டிருந்தார். விலை குறைவாக உள்ளதே, 'ஏர் கூலர்' வகையாக இருக்கலாம் என்று நினைத்து, வீடியோவில் குறிப்பிட்ட எண்ணுக்கு பணம் செலுத்தி, 'ஆர்டர்' செய்தேன்.


இரண்டு வாரத்திற்கு பிறகு, வீட்டு முகவரிக்கு பார்சல் வந்தது. பிரித்து பார்த்த போது, அந்த சாதனம் மிக சிறியதாக இருந்தது. எந்த இடத்திலும், 'ஏசி' என்று குறிப்பிடப்படவில்லை. மாறாக, 'வால் மவுன்ட்' என, பெயரிடப்பட்டிருந்தது. அதை பயன்படுத்திய போது, வெறும் சூடான காற்று மட்டுமே வந்தது குளிர்ந்த காற்று வரவில்லை. விசாரித்ததில், அது குளிர் காலங்களில் பயன்படுத்தப்படும், 'ஹீட்டர்' என்பது தெரியவந்தது. 'ஏசி' வாங்க வசதி இல்லாததால், குறைந்த விலையில் கிடைக்கிறேதே என நம்பி வாங்குகிறோம்.


இப்படி ஏமாற்றுவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. இவ்வாறு ஏமாற்றுவோர் மீது, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


இந்திய தர நிர்ணய அமைப்பின் அதிகாரிகள் கூறுகையில், 'ஏசி போன்ற பொருட்கள், பி.ஐ.எஸ்., பட்டியலில் உள்ளன. 'ஏசி' என்று கூறி போலி பொருட்களை விற்பனை செய்வது சட்டவிரோதமானது.

'இதுகுறித்து புகார் வந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். புகார்களை, hcnbo1@bis.gov.in என்ற இ-மெயில் முகவரில் அளிக்கலாம்' என்றனர்.

Advertisement