ஆங்கிலேயர் ஆட்சியில் உருவான நீதிமன்றம்

ஆசியாவில் உள்ள பழமையான துறைமுகங்களில் ஒன்று கடலுார் துறைமுகம். இயற்கையாக அமைந்த இந்த துறைமுகம் வழியாக ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள், இந்தியாவிற்குள் வணிகம் செய்ய வந்தனர்.

கி.பி.,17ம் நுாற்றாண்டில் இந்தியாவிற்குள் நுழைந்த ஆங்கிலேயர்களின் தலைநகரமாகவும் கடலுார் நகரம் விளங்கியது. கடலுார் நகரை அழகுற கட்டமைத்ததில் ஆங்கிலயேர்களின் பங்கு மிக முக்கியமானது.

ஆங்கிலேய ஆட்சி காலத்தில் நீதிமன்றம், சிறைச்சாலை, துாக்குமேடையாக பயன்படுத்தப்பட்ட கட்டடம், இன்றளவும் பார்வைக்கு உள்ளது. 1788ம் ஆண்டு, லண்டனைச் சேர்ந்த தாமஸ் பார் என்பவரால், ஈஸ்ட் இந்தியா டிஸ்டிலெரிஸ் நிறுவனம் இந்தியாவில் நிறுவப்பட்டது.

இதற்கு சொந்தமான கட்டடம் கடலுார் முதுநகரில் உள்ளது. இந்த கட்டடத்தில் தான் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வழக்குகள் விசாரிக்கும் நீதிமன்றம், சிறைச்சாலை, சட்டத்தின்படி குற்றவாளிக்கு விதிக்கப்படும் அதிகபட்ச தண்டனையாக துாக்குதண்டனையை நிறைவேற்றும் துாக்குமேடை போன்றவை உள்ளது.

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகையில், 'ஆங்கிலேயர்களால் வடிவமைக்கப்பட்ட கடலுார் முதுநகர் ஒட்டிய கடற்கரை கிராமங்களை குறிக்கும் கலர் வரைபடம், 18ம் நுாற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட 40ஆயிரம் பதிவேடுகள் மேல்புறம் தோலினால் பைண்டிங் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

கட்டடத்தின் முகப்பில் பிரிட்டிஷார் பயன்படுத்திய பீரங்கி வைக்கப்பட்டுள்ளது. 1866 முதல் 1885 வரை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சிறைச்சாலை அமைக்கப்பட்டு கைதிகள் அடைத்து வைக்கப்பட்டனர். அப்போது கட்டட வளாகத்திலேய அமைக்கப்பட்ட நீதிமன்றத்தில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு தண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகள் சிறையிலேயே அடைக்கப்பட்டனர். அதிக பட்ச தண்டனையாக துாக்கு தண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகளை துாக்கில் இட 10அடி நீளம், 3 அடி அகலம், 6 அடி பள்ளம் கொண்டு துாக்குமேடையும் செயல்பட்டு வந்துள்ளது. துாக்குமேடையின் மேற்புறம் மரத்தால் அமைக்கப்பட்ட சாரம் உள்ளது.

துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் கை, கால்கள் கட்டப்பட்டு டிராலி மூலம் மேடையில் நிறுத்தி தண்டனை நிறைவேற்றப்படும்.

மேலும் இந்த கட்டட வளாகத்திற்கு அருகிலுள்ள பரவனாற்றின் மூலம் ஆங்கிலேய அதிகாரிகள் தேவனாம்பட்டினம் பகுதிக்கு படகுகளில் பயணம் செய்தற்கான சான்றுகளும் உள்ளன என தெரிவித்தனர். சரித்திரப் புகழ் வாய்ந்த கட்டடம், இன்று முறையான பராமரிப்பின்றி செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. அவற்றை அகற்றி விட்டு கட்டடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement