கார் ஆலையில் இன்ஜின் திருட்டு; 9 தொழிலாளர்கள் கைது

பெனுகொண்டா : ஆந்திராவின் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் பெனுகொண்டா என்ற இடத்தில், கிழக்காசிய நாடான தென் கொரியாவைச் சேர்ந்த, 'கியா' கார் தயாரிப்பு நிறுவனத்தின் ஆலை செயல்படுகிறது.
இந்த ஆலையில் அவ்வப்போது கார் இன்ஜின்கள் மாயமாகி வந்தன. இதை தொடர்ந்து, கார் நிறுவனத்தின் அதிகாரிகள் அந்த ஆலையில் கடந்த மாதம் சோதனையிட்டனர். அப்போது, கடந்த ஐந்து ஆண்டுகளாக கார்களின் இன்ஜின்கள் திருடப்பட்டு வந்ததை கண்டறிந்தனர். கடந்த மாதத்தில் மட்டும், 100க்கும் மேற்பட்ட இன்ஜின்கள் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து, ஆலை நிர்வாகிகள் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அந்த நிறுவனத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஒன்பது தொழிலாளர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர்களை கைது செய்தனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இரண்டு பேர் வெளிநாட்டினர் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆந்திர போலீசார் தரப்பில் கூறியதாவது: கியா ஆலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருடிய இன்ஜின்களை கடத்தி, மீரட், டில்லி, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மதுரை போன்ற நகரங்களில் முறைகேடாக விற்றுள்ளனர்.
இந்த கும்பலுக்கு பின்னணியில் மிகப்பெரிய நெட்வொர்க் இருக்கக்கூடும் என சந்தேகிக்கிறோம். தற்போது, இந்த வழக்கில் 10 சதவீத விசாரணை மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, கைதான ஒன்பது பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விரைவில் அவர்களை, காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.