தேவாலயங்களில் ஈஸ்டர் திருநாள்

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில், இயேசு உயிர்ப்பு பெருவிழா என்னும் ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்பட்டது.
மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் ஆலயத்தில், கிறிஸ்தவர்கள், 40 நாட்கள் தவக்காலத்தை கடைபிடித்து வந்தனர். நேற்றுமுன்தினம் நள்ளிரவு, 11:00 மணிக்கு இயேசு உயிர்ப்பு பெருவிழா என்னும் ஈஸ்டர் திருநாள் திருப்பலி நடைபெற்றது. பங்கு பாதிரியார் ஹென்றி லாரன்ஸ் திருவிழா திருப்பலிக்கு தலைமை வகித்தார்.
இரட்சகர் சபை பாதிரியார் லுாயிஸ் மறைவுரை ஆற்றினார். இயேசு உயிர்த்ததை தியானித்து கிறிஸ்துவ மக்கள் அனைவரும், திருப்பலியில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, தங்களுடைய ஞானஸ்தானத்தை புதுப்பித்துக் கொண்டனர். இந்த திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
இதே போன்று மேட்டுப்பாளையம்-காரமடை சாலையில் உள்ள ஆரோக்கிய அன்னை ஆலயம், காரமடை மகதல மரியா, மேட்டுப்பாளையம் காட்டூர் புனித ஜோசப் ஆலயத்தில், ஈஸ்டர் திருநாள் திருப்பலிகள் நடந்தன.
சூலுார்
சூலுார் சுற்றுவட்டாரத்தில் உள்ள புனித சகாய அன்னை சர்ச் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சுகளில், ஏசுபிரான் உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.
அன்னுார்
அன்னுார், சத்தி ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் ஆலயத்தில் கடந்த வெள்ளியன்று சிறப்பு ஆராதனை நடந்தது. நேற்று அதிகாலை 4:30 மணிக்கும் பின்னர் காலை 9:30 மணிக்கும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது
இதில் ஆலய ஆயர் சாந்தகுமார் சிறப்பு செய்தி அளித்தார். ஆலயத்தின் உட்புறம் வெளிப்புறம் முழுமையாக மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பங்கேற்ற அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது.
ஆலய செயலாளர் பிரேம் தேவா, பொருளாளர் லிவிங்ஸ்டன், கமிட்டி உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். கெம்பநாயக்கன்பாளையம், பிள்ளையப்பம்பாளையம், எல்லப்பாளையம், பொன்னே கவுண்டன்புதூர் ஆகிய ஊர்களிலும் கிறிஸ்துவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.