'ஈஸ்டர்' திருநாள் கோலாகலம்

திருப்பூர், : ஏசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவான, ஈஸ்டர் பண்டிகையை திருப்பூரில் கிறிஸ்துவ மக்கள் நேற்று கோலாகலமாக கொண்டாடினர்.

ஏசு கிறிஸ்து, புனித வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் வகையில், உலகம் முழுவதும் நேற்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.

ஏசுவின் சிலுவைப்பாடுகளை உணரும் விதமாக 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்கால வாழ்க்கை மேற்கொண்டனர். சிலுவையில் அறையுண்ட நிகழ்வை புனித வெள்ளி அன்று நினைவுகூர்ந்த நிலையில், அவர் 3ம் நாள் உயிர்த்தெழுந்ததை ஈஸ்டர் பெருவிழாவாக கொண்டாடினர்.

திருப்பூர், பல்லடம், அவிநாசி சுற்றுப்பகுதிகளில் உள்ள சர்ச்கள், நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தன.

திருப்பூர், குமரன் ரோடு, புனித கத்தரீனம்மாள் சர்ச், குமார் நகர் புனித ஜோசப் சர்ச், அவிநாசி ரோடு சி.எஸ்.ஐ., புனித பவுல் சர்ச், அவிநாசி புனித தோமையார் சர்ச், சேவூர் லுார்து அன்னை சர்ச் உள்ளிட்ட சர்ச்கள் மற்றும் கிறிஸ்துவ சபைகளில், ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.

நேற்று முன்தினம் நள்ளிரவு மற்றும் நேற்று அதிகாலை நேரங்களில், சிறப்பு பிரார்த்தனை; பைபிள் வாசிக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. மெழுகுவர்த்திகளை கையில் ஏந்தி வேண்டுதலை கிறிஸ்தவ மக்கள் முன் வைத்தனர்.

ஏசு உயிர்த்தெழும் நிகழ்வும், தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது. கூட்டுப்பாடல், திருப்பலி நிகழ்ச்சி நடந்தது.

Advertisement