மாவட்ட நிர்வாகத்திடம் முதியோர்களை ஒப்படைக்க அழைத்து வந்ததால் பரபரப்பு

1

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே மாத்துாரில் முதியோர் இல்லம் நடத்துவதற்கு உரிமம் புதுப்பிக்க மாவட்ட நிர்வாகம் அலைக்கழிப்பதால், முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க, ஆம்புலன்சில் அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், மாத்துாரில் கருணை கண்கள் டிரஸ்ட் என்ற பெயரில், புதுக்கோட்டையைச் சேர்ந்த லட்சுமி, 50, என்பவர் முதியோர் இல்லம் நடத்தி வருகிறார். இங்கு, 25க்கும் மேற்பட்ட முதியோர் பராமரிக்கப்படுகின்றனர்.

முதியோர் இல்லம் நடத்துவதற்கான உரிமத்தை புதுப்பிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதப்படுத்தி வந்ததால், அங்குள்ள 25 பேரையும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க, முதியோர் இல்ல நிர்வாகிகள் நேற்று முடிவு செய்தனர்.

அதற்காக, அந்த முதியோரை ஆம்புலன்சில் ஏற்றி, கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

பின், கலெக்டர் அருணாவிடம் முதியோர் இல்ல நிர்வாகி மனு அளித்தார். மனு மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி, கலெக்டர் அவர்களை அனுப்பி வைத்தார்.

இது குறித்து, கருணை கண்கள் டிரஸ்ட் நிர்வாகி லட்சுமி கூறியதாவது:

நான் மிகவும் சிரமப்பட்டு, முதியோர் இல்லத்தை நன்றாக நடத்தி வருகிறேன். முதியோரை எந்த வித கஷ்டத்திற்கும் உள்ளாக்காமல் சிறப்பாக நடத்தி வருகிறேன். என் முதியோர் இல்ல உரிமம் முடிந்து விட்டது.

முதியோர் இல்லத்தை புதுப்பிப்பதற்கு கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறையிடம் விண்ணப்பித்தபோது, மூன்று மாத காலமாக நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்து வருகின்றனர். அதனால், என்னிடம் உள்ள முதியோரை ஆம்புலன்சில் ஏற்றி, அழைத்து வந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதியோர்கள் பலரையும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க அழைத்து வந்ததால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement