தமிழகத்திற்கு கடத்த முயன்ற ரூ.8 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: இலங்கையில் இருவர் கைது

4

தலைமன்னார்: இலங்கையின் தலைமன்னாரில் இருந்து நூதனமான முறையில் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் கடத்தி வர இருந்த ரூ.8 கோடி மதிப்பிலான 8.5 கிலோ தங்க கட்டிகளை தலைமன்னார் கடற்பரப்பில் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து இலங்கைக்கு நாட்டுப்படகுகளில் சட்டவிரோதமான முறையில் கஞ்சா, கடல் அட்டை, கடல் குதிரை, பீடி இலை, ஐஸ் போதை பொருள், கொக்கைன், கஞ்சா ஆயில் உள்ளிட்டவைகள் கடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகத்திற்குள் தங்கம் கடத்திவரப்பட்டு வருகிறது.


இந்த கடத்தல் சம்பவங்களை தடுக்கவும், கண்காணிக்கவும் இந்திய கடலோர காவல் படை மற்றும் இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளதால் இரு நாட்டு கடற்படையினரும் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.


இந்நிலையில் தலைமன்னார் கடற்கரையிலிருந்து சட்டவிரோதமான முறையில் தனுஷ்கோடி கடல் வழியாக தங்கம் தமிழகத்திற்குள் கடத்தி செல்ல இருப்பதாக இலங்கை கடற்படையின் மன்னார் கடற்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தன் அடிப்படையில் இன்று அதிகாலை தலைமன்னார் கடற்கரை பகுதியில் இலங்கை கடற்படையினர் திடீர் சோதனை ஒன்று நடத்தினர்.


அப்போது ஒரு தெப்பத்தை பயன்படுத்தி தலைமன்னாரிலிருந்து இருவர் மீன் பிடிக்க செல்ல முயன்றுள்ளனர். இதனைக் கண்டு இலங்கை கடற்படையினர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த கடற்படையினர் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெப்பத்தை சோதனை செய்தனர்.


அப்போது அந்த தெப்பத்தில் அலுமினியம் பெயிண்ட் பூசப்பட்ட பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அது சந்தேகப்படும்படி இருந்ததால் அந்த பொருட்களை எடுத்து இலங்கை கடற்படையினர் சோதனை செய்தபோது தங்க கட்டிகள் மீது அலுமினியம் பெயிண்ட் பூசப்பட்டு அதனை அந்த தெப்பத்தில் வைத்துஎடுத்துச் சென்று தங்க கட்டிகள் அடங்கிய பார்சலை தமிழகத்திலிருந்து வரும் நாட்டு படகில் சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்பரப்பில் வைத்து ஒப்படைக்க இருந்தது கடற்படையினரின் விசாரணையில் தெரிய வந்தது.


இதனையடுத்து இலங்கை கடற்படையினர் தங்கத்தை பறிமுதல் செய்து யாழ்ப்பாணம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்த தங்கக் கட்டிகள் 8.5 கிலோ இருந்ததும், இதன் மதிப்பு ரூ.8 கோடி இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் செல்போன் எண்கள் எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் யார் என்பது குறித்தும், இலங்கையில் இருந்து தங்கத்தை யார் அனுப்பி வைத்தார்கள் கன்ற கோணத்திலும் இலங்கை கடற்படையின் உளவுத்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement