புறப்பட்டார் புது விஞ்ஞானி உடலில் இருக்கும் மின்சாரமே பட்டாசு விபத்திற்கு காரணம்

1

சென்னை:“மனித உடலில் இருக்கும் மின்சாரமே பட்டாசு ஆலை விபத்திற்கு காரணம்,” என, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

ம.தி.மு.க., - ரகுராமன்: உயிரை பணயம் வைத்து நேரடியாகவும், மறைமுகமாகவும், எட்டு லட்சம் தொழிலாளர்கள் பட்டாசு தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில், 1,00 பட்டாசு ஆலைகள் உள்ளன. இதில், சாத்துார், சிவகாசியில் அதிக ஆலைகள் உள்ளன.

பட்டாசு ஆலைகளில் ஏதேனும் விபத்து ஏற்படும் போது, ஆலை உரிமையாளர்களை கைது செய்கின்றனர். இதனால், விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான இழப்பீட்டை வழங்க முடியாத நிலை உள்ளது. எனவே, உரிமையாளர்களுக்கு பதிலாக, ஆலையின் மேலாளரை கைது செய்ய வேண்டும். பட்டாசு ஆலை ஆய்வுக்கு வரும் அதிகாரிகள், பல ஆலைகளை பல மாதங்களுக்கு மூடி விடுகின்றனர். இதனால், பாதிப்பு ஏற்படுகிறது.

அமைச்சர் கணேசன்: பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துகளில், 10 பேர், 20 பேர் என உயிரிழப்பது வழக்கமாக இருக்கிறது. பட்டாசு ஆலைகளுக்கு நேரில் சென்று, அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் குறைகளை கேட்ட ஒரே முதல்வர் ஸ்டாலின் மட்டுமே.

மார்ச், ஏப்ரல், மே போன்ற கோடை காலங்களில், பட்டாசு ஆலைகளில் அதிக விபத்துகள் நடக்கின்றன. 1500க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள், மூன்று லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களின் வாழ்வாதாரமான பட்டாசு தொழிலாளர்களை பாதுகாக்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

விபத்தில் இறந்தவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவையும், 18 வயது நிறைவடையும் வரை, அவர்களின் பராமரிப்பு செலவையும், தமிழக அரசே ஏற்கும்.

காற்றில் தண்ணீரில் இருப்பது போல, மனித உடலிலும் மின்சாரம் உள்ளது. மனித உடலில் உள்ள மின்சாரம், பட்டாசு தயாரிக்க உள்ள ரசாயனங்களில் கலக்கும் போது, தீ பற்றி விபத்து ஏற்படுகிறது. அதனால், ஒவ்வொரு பட்டாசு ஆலையிலும் துத்தநாக கல் வைத்திருப்பர். அதில், கையை வைக்கும் போது, மனித உடலில் உள்ள மின்சாரம், 'டைவர்ட்' ஆகிறது. விபத்துகளை தடுப்பதற்காகவே, பட்டாசு ஆலைகளில் ஆய்வுகள் அதிகமாக நடத்தப்படுகின்றன. ஆலை உரிமையாளர்கள், உற்பத்தியாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அரசு பார்த்துக் கொள்ளும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கடந்த 2017 அ.தி.மு.க., ஆட்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த செல்லுார் ராஜு, வைகை அணையில் உள்ள நீர், சூரிய வெப்பத்தால் ஆவியாகி வீணாவதை தடுக்க, அணையில் தெர்மோகோல்களை மிதக்க விட்டார். அரசு அதிகாரிகள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் வெளியாகி, சாதாரண மக்களிடமும் பேசுபொருளானது. அதனால் இன்று வரை, செல்லுார் ராஜுவை, 'தெர்மோகோல் விஞ்ஞானி' என, கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், 'மனித உடலில் இருக்கும் மின்சாரமே பட்டாசு ஆலை விபத்திற்கு காரணம்' என, அமைச்சர் கணேசன் கூறியிருப்பதும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Advertisement