மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் பொறியாளருக்கு 3 ஆண்டு சிறை

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ. ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் மின்வாரிய பொறியாளர் கனகராஜூக்கு 58, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சூலக்கரை அருகே மார்த்தநாயக்கன்பட்டியை சேர்ந்த ஆதிலட்சுமி என்பவர் வீட்டில் கட்டுமான பணி செய்வதற்காக மின் அளவீடு பெட்டியை இடமாற்றவும் ,மின் இணைப்பு பெயரை மாற்றம் செய்து தரக்கோரி மின்வாரிய அலுவலகத்தில் எலக்ட்ரீசியன் ரமேஷ் மூலம் விண்ணப்பித்தார். இணைப்பு மாற்றம் செய்வதற்கு சூலக்கரை துணை மின் நிலைய இளநிலை பொறியாளர் கனகராஜ், ரூ. ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து ரமேஷ் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். 2012 ஜன. 3ல் லஞ்ச பணத்தை பெறும் போது கனகராஜூவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் கனகராஜூக்கு 3 ஆண்டு சிறை தண்டனை ,ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வீரணன் தீர்ப்பளித்தார்.

Advertisement