மீண்டும் ஜாதி வாரி கணக்கெடுப்பு அரசுக்கு வீரப்ப மொய்லி அறிவுரை

பெங்களூரு | ;“காந்தராஜ் ஆணைய அறிக்கையை லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலும் ஒப்புக்கொள்வது கஷ்டம். மீண்டும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்,” என, காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி அறிவுறுத்தினார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கையை செயல்படுத்தும் முன்பு, அதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அனைத்து கட்சிகளின் கருத்துகளை பெற வேண்டும்.

எனக்கு கிடைத்த தகவலின்படி, காந்தராஜ் ஆணைய அறிக்கையை, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலும் ஒப்புக்கொள்வது கஷ்டம்.

அமைச்சரவை கூட்டத்திலும் கூட, சில அமைச்சர்கள், அறிக்கை குறித்து கேள்வி எழுப்பியதாக தகவல் வந்தது.

கடந்த 1992ல், நான் முதல்வராக இருந்த காலத்தில், சின்னப்பா ரெட்டி அறிக்கையை தாக்கல் செய்தபோது, லிங்காயத் மக்கள்தொகை, தற்போதைய அறிக்கையில் கூறியுள்ளதை விட, அதிகமாக இருந்தது.

இத்தனை ஆண்டுகளுக்கு பின், இவர்களின் எண்ணிக்கை குறைந்தது எப்படி?

உண்மையில் இவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்க வேண்டும். எனவே அறிக்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். இந்த அறிக்கை விவேகமற்றது என்பதை, நானும் ஒப்புக்கொள்கிறேன்.

மறு கணக்கெடுப்பு நடத்த வேண்டும். புதிதாக ஆய்வு செய்தால் மட்டுமே, தெளிவான புள்ளி விபரங்கள் தெரியும். இல்லாவிட்டால் சர்ச்சை ஏற்படும்.

தற்போதைய ஜாதி வாரி அறிக்கையில், மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு அரசு பதிலளிக்க வேண்டும். எனவே அரசு அவசர முடிவு எடுக்கக் கூடாது.

செல்வாக்கு மிக்க சமுதாயங்களை, முதல்வர் சித்தராமையா குறைத்து காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சரியான அறிக்கை அல்ல என, மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்வது அவசியம். லட்சக்கணக்கான மக்கள், ஆய்வில் விடுபட்டுள்ளனர். எனவே மறு ஆய்வு தேவை என, நான் கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement