'ஏம்பா நீயே பெரிய ஆளு...' கவுன்சிலரை கலாய்த்த கமிஷனர்

திருச்சி:புகார் அளிக்க சென்ற ஆளுங்கட்சி கவுன்சிலரை கலாய்த்த துணை கமிஷனரை கண்டித்து மறியல் போராட்டம் நடந்தது.

திருச்சி மாநகராட்சி, 57வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் முத்துச்செல்வம். இவரது வார்டில் வசிக்கும் முத்தையன் என்ற முதியவரின் நிலத்தை பொதுப்பாதையாக்கும் முயற்சியில் முத்துச்செல்வம் ஈடுபட்டுள்ளதாக, முத்தையன் மகள்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனால் அவர்களது வீட்டுக்கு அடிக்கடி சென்ற முத்துச்செல்வம், அவர்களை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. தன் பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில், முத்தையன் குடும்பத்தார் நடப்பதாக கூறி, வார்டு மக்கள், 100க்கும் மேற்பட்டோருடன், திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு முத்துச்செல்வம் வந்தார்.

அவரை கமிஷனர் அலுவலக வாசலில் தடுத்து நிறுத்திய துணை கமிஷனர் ஈஸ்வரன், 'ஏம்பா நீயே பெரிய ஆளு... உன்னை யாருப்பா மிரட்டுறது...' என, கலாய்த்தார். ஆத்திரமடைந்த முத்துச்செல்வம் தரப்பினர், திருச்சி - புதுக்கோட்டை சாலையில் போலீசாரை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீஸ் கமிஷனர் காமினி பேச்சு நடத்தி, 'சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வேண்டும். இங்கு வந்து பிரச்னை செய்தால் கைது செய்யப்படுவீர்கள்' என, எச்சரித்தார். இதையடுத்து, மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்தனர்.

Advertisement