நிலத்தை அளக்க ரூ.5000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., தலையாரி கைது

அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வதுவார்பட்டி கிராமத்தில் விவசாயியின் நிலத்தை அளக்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ ., இப்ராஹிம் 54, தலையாரி சிங்காரம் 54, ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

வதுவார்பட்டியை சேர்ந்த விவசாயி சின்னத்தம்பி. இவர் தன் விவசாய நிலத்தை அளந்து சான்றிதழ் பெறுவதற்கு வதுவார்பட்டி வி.ஏ.ஓ ., ஆக உள்ள அருப்புக்கோட்டை வாழவந்தபுரம் ஜின்னா தெருவை சேர்ந்த இப்ராஹிம் என்பவரை அணுகியுள்ளார். அவரிடம் வி.ஏ.ஓ ., வும், செட்டிகுறிச்சியை சேர்ந்த தலையாரி சிங்காரமும் நிலத்தை அளக்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.

இதுகுறித்து அவர் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ஏ.டி.எஸ்.பி., ராமச்சந்திரன் , இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் போலீசார் சின்னத்தம்பியிடம் ரசாயனம் தடவப்பட்ட 5 ஆயிரம் ரூபாயை கொடுத்து அனுப்பினர். நேற்று காலை 11:00 மணிக்கு வதுவார்பட்டி அலுவலகத்தில் இருந்த வி.ஏ.ஓ., இப்ராஹிமிடம் அந்த பணத்தை அவர் கொடுத்துள்ளார். அதைப்பெற்ற இப்ராஹிம், உடன் இருந்த தலையாரி சின்னத்தம்பியை அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Advertisement