பயங்கரவாதிகளுக்கு கண்டனம்: காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம்

7


ஸ்ரீநகர்: காஷ்மீரில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் , அம்மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.


காஷ்மீரின் பஹல்காமில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவத்திற்கு காஷ்மீரில் அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன. பயங்கரவாதிகளுக்கும், தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில், காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும், வர்த்தக அமைப்புகளும் இதற்கு ஆதரவு அளித்தன. இப்போராட்டம் முழு வெற்றி பெற வேண்டும் எனக்கூறியிருந்தன.


இதனையடுத்து மாநிலம் முழுதும் இன்று காலை முதல் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதனால், அனைத்து கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால், ஆள் நடமாட்டம் இன்றி முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மாநிலம் முழுதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


இது தொடர்பாக வர்த்தக சங்கத்தினர் கூறுகையில், ' நேற்று மனதை வலிக்கும் வகையில் நடந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடக்கிறது. அதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். மனிதநேயத்திற்கு எதிரான மரணம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிராக உள்ளோம் என்றனர்.


சுற்றுலா பயணி ஒருவர் கூறுகையில், இது மிகப்பெரிய தாக்குதல். சோகத்தை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற தாக்குதல் நடந்து இருக்கக்கூடாது. காஷ்மீரில் நடக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு உள்ளூர் மக்கள் ஆதரவு அளிக்கின்றனர் என்றார்.


ஸ்ரீநகரில் வசிக்கும் ஆஷிக் ஹூசைன் கூறியதாவது: பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உயிரிழந்தது என்ற செய்தி நல்ல விஷயம் அல்ல. இது மனிதநேயத்திற்கு எதிரானது. இதுபோன்ற சம்பவங்கள் ஏன் நடக்கிறது என தெரியவில்லை. சுற்றுலா உச்சத்தில் இருக்கும் நிலையில், தற்போது நடந்தது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். உலகம் முழுதும் பெயர் கெட்டு போய் உள்ளது. இது போன்று மீண்டும் தாக்குதல் நடக்கக்கூடாது. இது முற்றிலும் கண்டனத்திற்கு உரியது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement