பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பிரதமருக்கு முஸ்லிம்களின் செய்தி: சோனியா மருமகன் சர்ச்சை

64

புதுடில்லி: ''ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் என்பது, தாங்கள் பலகீனமடைந்து வருவதாக முஸ்லிம்கள் நினைப்பதால் பிரதமர் நரேந்திர மோடிக்கு சொல்லும் செய்தியாகும்,'' என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா கூறியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவின் மகளும், லோக்சபா எம்.பி.,யுமான பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா தொழிலதிபராக உள்ளார்; அவ்வப்போது, மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகிறார்.

பாகுபாடு



ஜம்மு -- காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதல்களில், 26 சுற்றுலா பயணியர் கொல்லப்பட்டனர். இது குறித்து, ராபர்ட் வாத்ரா கூறியதாவது:

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இரங்கல். இது, மூர்க்கத்தனமான நடவடிக்கை.

தற்போது நாட்டில் உள்ள அரசு, ஹிந்துத்துவாவை பற்றியே பேசுகிறது. இதனால், சிறுபான்மையினர் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, பலகீனமடைந்துள்ளதாக கருதுகின்றனர்.

பஹல்காமில் நடந்த தாக்குதலின்போது, அடையாள அட்டைகளை சரிபார்த்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். ஏன் அவ்வாறு செய்தனர் என்று பார்க்க வேண்டும்.

ஏனென்றால், இந்தியாவில் தற்போது ஹிந்து - முஸ்லிம் என்ற பாகுபாடு உள்ளது.

தாக்குதல் நடக்காது



ஹிந்துக்களாலேயே நமக்கு தொந்தரவு என்று முஸ்லிம்களை சிந்திக்க வைத்து விடுகிறது. அதனால் தான், அடையாள அட்டையைப் பார்த்து கொன்றுள்ளனர்.

தாங்கள் பலகீனமடைந்து வருவதாக முஸ்லிம்கள் நினைக்கின்றனர். அதுவே, பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த தாக்குதல் சொல்லியுள்ள செய்தி.

சிறுபான்மையினர் பாதுகாப்பில்லாமல் இருப்பதாக நினைக்கின்றனர். நாம் பாதுகாப்பாகவும், மதச்சார்பு இல்லாமலும் இருக்கிறோம் என்ற உணர்வை நாட்டின் தலைமை ஏற்படுத்த வேண்டும். அப்போது, இது போன்ற தாக்குதல்கள் நடக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.



பா.ஜ., கண்டனம்

ராபர்ட் வாத்ராவின் பேச்சுக்கு, பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாள்வியா கூறியதாவது:சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா, பயங்கரவாத செயலுக்கு வெட்கமில்லாமல் ஆதரவளிக்கிறார். அந்த செயலை கண்டிக்காமல், பயங்கரவாதத்துக்கு ஆதரவாக பேசியுள்ளார். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை கண்டிக்காமல், இந்தியா மீது பழி போடுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே கூறியதாவது:நாடே சோகத்தில் இருக்கும்போது, சோனியாவின் குடும்பம் முஸ்லிம்களையே பார்க்கிறது. காங்கிரசின் இந்த மனநிலை தான், நாட்டில் வெறுப்புணர்வை விதைத்துள்ளது, சனாதன தர்மத்தால், காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை நாடு ஒற்றுமையாக உள்ளது.பிரதமர் மோடி தலைமையில், இந்தியா தொடர்ந்து வலுவாகவும், வெற்றிகளையும் பெறும். பயங்கரவாதிகளும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களும் நிச்சயம் அழிக்கப்படுவர். வெளிநாட்டில் உள்ள எதிரிகளும், நம் நாட்டில் முஸ்லிம்களை துாண்டி விடுபவர்களும் நிச்சயம் அழிக்கப்பட வேண்டியவர்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement