அமைச்சர் பதவியிலிருந்து நீக்க கோரிய வழக்கு தமிழக அரசு மற்றும் பொன்முடிக்கு 'நோட்டீஸ்'
சென்னை:'சைவம், வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய, அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவுக்கு, தமிழக அரசு உள்ளிட்டோர் பதில் அளிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
சென்னையில் பெரியார் திராவிட கழகம் சார்பில், கடந்த 8ம் தேதி நடந்த கூட்டத்தில், அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். கூட்டத்தில், சைவம், வைணவ சமயங்களை, பெண்களை ஆபாசமாக பேசியது, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மனு தாக்கல்
அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, தி.மு.க., துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி, வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.
மனுவில், 'மக்கள் பிரதிநிதி என்ற முறையில், அமைச்சர் பொன்முடியின் பேச்சு, அரசியல் சாசனத்துக்கு எதிரானது. குறிப்பிட்ட மதத்தை பற்றி, அவதுாறாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல. அனைத்து மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு, அமைச்சரான அவருக்கு உள்ளது.
'அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்கள் அளிக்கப்பட்டும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பதவி பிரமாணத்தை மீறிய பொன்முடியை, பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் அடங்கிய முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
தள்ளி வைப்பு
அப்போது, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''மனுதாரர் தாக்கல் செய்த கூடுதல் மனுவில், வழக்குக்கு தொடர்பு இல்லாத முதல்வர் குறித்து, அவதுாறு கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றை நீக்க வேண்டும்,'' என்றார்.
இதை மனுதாரர் ஜெகன்நாத் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, அட்வகேட் ஜெனரல் சுட்டிக்காட்டிய பகுதிகளை நீக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பாக, ஜூன் 5ம் தேதிக்குள், தமிழக அரசு, அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பதில் அளிக்க வேண்டும் எனக்கூறி, விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
மேலும்
-
புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சத்ய சாய்பாபா ஆராதனை மஹோத்சவம்
-
வார்த்தை வலையில் சிக்கிய தி.மு.க., அரசு!
-
டில்லி பாக்., துாதரகம் முன் கொந்தளித்த பொதுமக்கள்!
-
சிந்து நதி நீர் நிறுத்தம்; சந்திக்கப் போகும் சவால்கள்!
-
பாகிஸ்தானுக்கு பதிலடி; இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன?
-
கைத்தறி நெசவு தொழில் பாதுகாக்கப்படுமா?