டில்லி பாக்., துாதரகம் முன் கொந்தளித்த பொதுமக்கள்!

3


புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து, டில்லியில் உள்ள பாகிஸ்தான் துாதரகத்தின் முன், நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு நேற்று போராட்டம் நடத்தியதை அடுத்து, அங்கு பதற்றம் நிலவியது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் கூடி, பாகிஸ்தான் உடனான உறவை துண்டிக்கும் பல்வேறு முக்கிய முடிவுகளை அறிவித்தது. அதன்படி, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் செயல்படும் துாதரக பணியாளர்களின் எண்ணிக்கை மே 1ம் தேதிக்குள், 55ல் இருந்து 30 ஆக குறைக்கப்படுகிறது.

பதற்றம்



இஸ்லாமாபாதில் உள்ள இந்திய துாதரை நாடு திரும்பவும், டில்லியில் உள்ள பாக்., துாதரை வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. டில்லி பாக்., துாதரகத்தில் உள்ள அந்நாட்டு ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆலோசகர்களை திரும்பிச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, இஸ்லாமா பாதில் உள்ள நம் முப்படை ஆலோசகர்களையும் திரும்பப் பெற்று உள்ளது.



முக்கியமாக, இந்தியா - பாக்., இடையே, 1960ல் கையெழுத்தான சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அட்டாரி - வாகா எல்லை மூடப்பட்டுள்ளது. அதன் வழியே நம் நாட்டுக்குள் வந்த பாகிஸ்தானியர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலையில் டில்லி சாணக்கியாபுரியில் உள்ள பாக்., துாதரகத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர், பெரிய அட்டைப்பெட்டியுடன் உள்ளே நுழைந்தார்.


அது, கேக் வைக்கப்பட்டிருந்த பாக்ஸ் போல் இருந்தது. இதையடுத்து, அங்கு நின்றிருந்த பத்திரிகையாளர்கள், அவரை சூழ்ந்தபடி, 'எதற்காக கேக் எடுத்துச் செல்கிறீர்கள். உள்ளே என்ன கொண்டாட்டம் நடக்கிறது' என சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.


இதற்கிடையே, பா.ஜ., மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை மன்றத்தைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர், டில்லி சாணக்கியாபுரியில் உள்ள பாக்., துாதரகம் முன் நேற்று காலை திரண்டனர்; பாக்., அரசின் பயங்கரவாத ஆதரவு போக்குக்கு எதிராக கண்டன குரல் எழுப்பினர்.


'தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது, கொள்கைகளை மறந்து அரசியல் கட்சியினர் நாட்டுக்காக ஒன்று சேர வேண்டும். மத்திய அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக உள்ளது' என, போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.அவர்களை போலீசார் சமாதானப்படுத்த முயன்றனர்.



பாக்., துாதருக்கு சம்மன்



இந்நிலையில், டில்லியில் உள்ள பாகிஸ்தான் துாதர் சாத் அகமது வாராய்ச் நேரில் ஆஜராகும்படி மத்திய அரசு நேற்று சம்மன் அனுப்பியது. டில்லி பாக்., துாதரகத்தில் உள்ள அந்நாட்டு முப்படைகளின் ஆலோசகர்களுக்கு விதிக்கப்பட்ட தகுதி இழப்பு நடவடிக்கைக்கான உத்தரவை, பாக்., துாதரிடம் நம் அதிகாரிகள் வழங்கினர்.



சமூக வலைதளம் முடக்கம்

பாகிஸ்தான் அரசின், 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, பாக்., அரசின் சமூக வலைதள பக்கத்தை இந்தியாவில் முடக்கி உள்ளதாக எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.




நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் சாலை மார்க்கமாக வர அட்டாரி - வாகா எல்லை மட்டுமே உள்ளது. இதன் வழியே இந்தியாவுக்குள் வந்தவர்கள், அடுத்த 48 மணி நேரத்தில் திரும்பிச் செல்ல மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அட்டாரி - வாகா எல்லை வழியாக ஏராளமான பாகிஸ்தானியர்கள் கூட்டம் கூட்டமாக நேற்று நாடு திரும்பினர். அதேப்போல, பாகிஸ்தானில் உள்ள உறவினர்களை காணச் சென்ற இந்தியர்களும் நேற்று நாடு திரும்பினர்.

Advertisement