கைத்தறி நெசவு தொழில் பாதுகாக்கப்படுமா?

திருப்பூர்; ''கைத்தறி நெசவுத் தொழிலை பாதுகாக்கும் நோக்கில், நடப்பு ஆண்டை, கைத்தறி ஆண்டாக அறிவிக்க வேண்டும்'' என, தமிழக அரசுக்கு, கைத்தறி நெசவாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோவை மண்டல பாரதீய மஸ்துார் கைத்தறி நெசவாளர் சங்கப் பொதுச்செயலாளர் நடராஜன் கூறியதாவது:

கோவை மண்டலத்தில், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறிகள் உள்ளன. இவற்றை சார்ந்துள்ள நெசவாளர் குடும்பங்கள் போதிய வருவாய் இன்றி சிரமப்படுகின்றன.

தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இன்றைய சூழலில், கைத்தறி நெசவுத்தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. பாரம்பரியமாக தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். வருவாய் குறைந்த தொழிலை செய்ய யாரும் முன்வருவதில்லை. இதற்கு ஏற்ப மத்திய மாநில அரசுகளும், கைத்தறி தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காததால், தொழில் அழிவு நிலையில் உள்ளது. பட்டு சேலை உற்பத்திதான் கைத்தறிக்கு பெயர் போனது. ஆனால், சமீப நாட்களாக, பட்டு நுாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பட்டு நுால் வாங்குவது நிறுத்தப்பட்டதன் காரணமாக, உள்நாட்டில் பட்டு நுாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வாரம் நான்கு சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது, இரண்டு சேலைகளுக்கு மட்டுமே நுால் வழங்கப்படுகிறது.

கைத்தறி தொழிலை பாதுகாக்கும் நோக்கில், நடப்பு ஆண்டை கைத்தறி ஆண்டாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் பட்டு உற்பத்தியை அதிகப்படுத்தி, பாவு நுால் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு காட்டன் புடவை உருவாக

ஒன்றரை நாள்... இருவர் உழைப்புகைத்தறிகள் மூலம், வேட்டி, புடவை, ஜமக்காளம், துண்டு உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் உற்பத்தி ஆகின்றன. 6.2 மீட்டர் நீளமுள்ள ஒரு காட்டன் புடவையின் விலை, 1,607 ரூபாய் ஆகும். இதை உற்பத்தி செய்தால் 1,100 ரூபாய் கூலி கிடைக்கிறது. ஒரு குடும்பத்தில், கணவன்--மனைவி என, இருவரும் சேர்ந்து ஒன்றரை நாள் வேலை செய்தால்தான், ஒரு புடவையை நெய்து கூலியை பெற முடியும்.

Advertisement