மணல் மூட்டை அடுக்கி ரவுண்டானா நெ.சா.துறையினர் சோதனை முயற்சி

திருவள்ளூர்:திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலையில், சுங்கச்சாவடி நான்கு சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைப்பதற்கு முன்னோட்டமாக, மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு, வாகன போக்குவரத்து நடந்து வருகிறது.

சென்னை, காஞ்சிபுரம், ஆவடி பகுதியில் இருந்து திருப்பதி, திருத்தணி, ஊத்துக்கோட்டை செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை வழியாக, கலெக்டர் அலுவலகத்தை கடந்து செல்கின்றன.

சுங்கச்சாவடி அருகில், நான்கு சாலை சந்திக்கும் இடம் உள்ளது.அங்கு, வலதுபுறம் ஊத்துக்கோட்டைக்கும், இடதுபுறம் மருத்துவக் கல்லுாரிக்கு செல்லும் சாலை பிரிந்து செல்கிறது.

அந்த இடத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், சாலை குறுகலாக இருப்பதால், கனரக வாகனங்கள் திரும்புவதற்கு சிரமப்பட்டு வந்தன.

இதையடுத்து, மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில், சுங்கச்சாவடி அருகில் நான்கு சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைக்கும் பணி, இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக, நான்கு சாலை சந்திக்கும் இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மருத்துவக் கல்லுாரி மற்றும் ஊத்துக்கோட்டை சாலையில், மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

அப்பணி முடிவடைந்த நிலையில், ரவுண்டானா அமைக்கவும், நான்கு சாலை பிரியும் இடத்தில், முக்கோண வடிவில் மீடியன் அமைக்கப்பட உள்ளது.

இதற்கு முன்னோட்டமாக, ரவுண்டானா மற்றும் மீடியன் அமையும் இடங்களில், மணல் மூட்டை அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த சோதனை முயற்சி வெற்றியடைந்தால், ரவுண்டானா அமைக்கப்படும் என, நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் தெரிவித்தார்.

Advertisement