சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

3

நம் அண்டை நாடான திபெத் மற்றும் இமயமலை அடிவாரத்தில் உள்ள ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்து உருவாகும் ஆறு நதிகள், சிந்து நதி தொகுப்பாக கூறப்படுகிறது. இந்த நதிகள், இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக பாய்ந்து, அரபிக் கடலில் கலக்கின்றன. சுதந்திரத்துக்குப் பின் ஏற்பட்ட பிரிவினையைத் தொடர்ந்து, இந்த நதிகளை பயன்படுத்துவது தொடர்பாக, நம் அண்டை நாடான பாகிஸ்தானுடன் சர்ச்சை ஏற்பட்டது.


இந்நிலையில், 1960ல், உலக வங்கியின் முன்னிலையில், இந்தியா, பாகிஸ்தான் இடையே சிந்து நதி நீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. உலக அளவில் மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் ஒப்பந்தமாக இது உள்ளது.


இந்த ஒப்பந்தத்தின்படி ராவி, பியாஸ், சட்லஜ் ஆகிய கிழக்கு நதிகள், இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும். அதே நேரத்தில், சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மேற்கு நதிகள் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த ஆறு நதிகளில் இருந்து கிடைக்கும் 21,800 கோடி கன அடி நீரில், 30 சதவீதம் மட்டுமே இந்தியாவுக்கு கிடைக்கிறது. மீதமுள்ள, 70 சதவீதம் பாகிஸ்தானுக்கு கிடைத்து வருகிறது.


இந்தியா - பாகிஸ்தான் இடையே 1965, 1971 மற்றும் 1999 ஆகிய மூன்று போர்கள் நடந்தபோதும், இந்த ஒப்பந்தம் நிறுத்தப்படவில்லை. ஆனால், தற்போது நடந்த பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது பாகிஸ்தானில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும்.


பாகிஸ்தானின் மொத்த நீர் தேவையில், 80 சதவீதம், சிந்து நதி தொகுப்பில் இருந்தே கிடைக்கிறது. இது நிறுத்தப்படுவதால், பாகிஸ்தானின் விவசாயம், பொருளாதாரம், சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும்.

தண்ணீர் தட்டுப்பாடு



நாட்டின் ஒட்டுமொத்த நீர் தேவைக்கு, சிந்து நதி தொகுப்புகளையே பாகிஸ்தான் நம்பியுள்ளது. இதனால், முதலில் குடிநீர் உட்பட தண்ணீர் பிரச்னையை பாகிஸ்தான் சந்திக்க வேண்டியிருக்கும்.

விவசாயம்



பாகிஸ்தானின் பொருளாதாரத்துக்கு அடிநாதமாக விவசாயம் உள்ளது. கோதுமை, அரிசி, பருத்தி ஆகியவை இங்கு முக்கிய பயிர்களாக உள்ளன. போதிய நீர் கிடைக்காவிட்டால், விவசாயம் பாதிக்கப்படும். இது மக்களின் வாழ்க்கையையும், உணவு பாதுகாப்பையும் பாதிக்க செய்யும்.

பொருளாதார பாதிப்பு



பாகிஸ்தானின், ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், விவசாயம், 20 சதவீதமாக உள்ளது. மேலும், மொத்த வேலை வாய்ப்பில், 40 சதவீதம் விவசாயத் துறை வாயிலாகவே கிடைக்கிறது. விவசாய துறையில் ஏற்படும் பாதிப்பு, பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். இதனால், வேலை வாய்ப்பின்மை உயர்வு, வறுமை போன்றவை ஏற்படும்.

மின்சார தட்டுப்பாடு



பாகிஸ்தானின் பெரும்பாலான அணைகள், சிந்து நதி தொகுப்பையே நம்பியுள்ளன. நீர் நிறுத்தப்பட்டால், மின்சார உற்பத்தி பாதிக்கப்படும். இது மின்சார தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதுடன், பொருளாதார நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

உணவு பாதுகாப்பின்மை



தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் விவசாய பாதிப்பு ஆகியவை, உணவுப் பொருட்களின் விலையை கடுமையாக உயர வைத்து விடும். இதனால், இறக்குமதியை நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள பாகிஸ்தானுக்கு இது பெருத்த அடியாக இருக்கும். இதைத் தவிர, உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்படும். மேலும், சுற்றுச்சூழல், நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு, மற்ற உயிரினங்கள் வாழ்க்கை முறை என, பல தரப்பட்ட பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.
Latest Tamil News

ஒப்பந்தத்தை மீறினால்...



'சிந்து நதி நீர் பங்கீடு ஆணையம்' சார்பில் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை கண்காணிப்பு, ஆண்டுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தப்படும். ஒப்பந்தத்தின் படி, சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை உள்ளிட்ட ஏதாவது புதிய திட்டங்களை துவங்கினால், பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதில் இரு நாடுகளுக்கு இடையே சமரசம் ஏற்படவில்லையெனில், நடுநிலையாக உலக வங்கியிடம் பிரச்னை செல்லும். இதிலும் தீர்வு இல்லையெனில் சர்வதேச நடுவர் நீதிமன்றத்தை அணுக வேண்டும்.



என்னென்ன



ஒரே நாளில் பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை நிறுத்த முடியாது 5 முதல் 10 சதவீத தண்ணீரை தான் தற்போது நிறுத்த முடியும் நீரின் ஓட்டத்தை தடுக்க வேண்டுமெனில் பல அணைகள், கால்வாய்களை அமைத்து இந்திய பகுதிக்குள் தண்ணீரை திருப்ப வேண்டும். இதற்கு சில ஆண்டு ஆகலாம் இதன் வாயிலாக, பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தானை வழிக்குக் கொண்டு வர முடியும் என பாதுகாப்பு துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.



- நமது சிறப்பு நிருபர் -

Advertisement